கடைசி பிஃபா உலகக்கோப்பை: சாதிப்பாரா மெஸ்ஸி?

அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி தனது கடைசி உலகக்கோப்பையில் கோப்பை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடைசி பிஃபா உலகக்கோப்பை: சாதிப்பாரா மெஸ்ஸி?

உலகமே உற்று நோக்கி இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவின் மாஸ்கோவில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. உலகக்கோப்பை கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் அர்ஜென்டினா தவிர்க்கப்படாத அணி. இந்த அணி 1978 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வென்றது. அதன்பிறகு அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற்றது கிடையாது. 

அர்ஜென்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரமே லயோனல் மெஸ்ஸி தான். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸிக்கு தனி இடம் உண்டு. மைதானத்தில் பந்து இவர் வசம் சென்றுவிட்டால் ஒட்டுமொத்த மைதானமே கொக்கரிக்கும் ஒரே சொல் மெஸ்ஸி. இவர், 2006-ஆம் ஆண்டு முதன்முறையாக அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாடினார். அந்த உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி காலிறுதிசுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. 

அதன்பிறகு, 2010-ஆம் உலகக்கோப்பையிலும் அந்த அணி காலிறுதி சுற்று வரை சென்று மீண்டும் அதே வலுவான ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. 

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற 2014-ஆம் உலகக்கோப்பையிலும் அர்ஜென்டினா நம்பிக்கையுடன் களமிறங்கியது. பார்சிலோனா அணிக்காக ஜொலிக்கும் மெஸ்ஸி தேசிய அணியான அர்ஜென்டினா அணியில் விளையாடும் போது ஜொலிக்க தவறுகிறார் என்ற விமரிசனங்கள் எழத் தொடங்கின. 

இதனால், கடந்த உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி சற்று ஆதிக்கம் செலுத்தி விளையாட காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இறுதிப்போட்டியில் கடந்த 2 உலகக்கோப்பைகளில் வெளியேற்றப்பட்ட அதே ஜெர்மனியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. அந்த போட்டியிலும் அர்ஜென்டினா அணி ஜெர்மனியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

இந்த சோகத்தில் இருந்து மீள நினைத்த அர்ஜென்டினா அணிக்கு அடுத்தடுத்து சோகங்கள் வந்தது. 2015 மற்றும் 2016 கோபா அமெரிக்கா தொடரிலும் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்டது. 

இதனால், மெஸ்ஸிக்கு எதிராக விமரிசனங்கள், ஊடகங்களின் தொடர் கேள்விகள் என தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால், வேறு வழி இல்லாமல் மெஸ்ஸி 2016-இல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சர்வதச கால்பந்து அணிக்காக விளையாட தொடங்கினார். 

இந்நிலையில், மெஸ்ஸி மீண்டும் உலகக்கோப்பையில் களமிறங்குகிறார். மெஸ்சிக்கு வயது 31 ஆகிறது. அதனால், அவரால் அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட முடியுமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 3 முறை கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்த மெஸ்ஸிக்கு உலகக்கோப்பையை ருசிப்பதற்கு இது கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. 

இந்த உலகக்கோப்பைக்கே கடைசி தகுதிச் சுற்று போட்டியில் ஈகுவாட்டர் அணிக்கு எதிராக மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோலால் தான் அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது.

அதனால், இந்த கடைசி வாய்ப்பில் மெஸ்ஸி தனது முழு உழைப்பையும் செலவிட்டு இந்த உலகக்கோப்பையை கைப்பற்றுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இதுகுறித்து மெஸ்ஸி கூறுகையில் கூட, நாங்கள் உலகக்கோப்பை வெல்ல இது கடைசி வாய்ப்பு. இந்த உலகக்கோப்பைக்கு பிறகு நான் ஓய்வு பெறுவேனா இல்லையா என்று தெரியாது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் எப்படி விளையாடப் போகிறோம் என்பதை எண்ணியிருக்கிறோம் என்றார்.

அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸியுடன் மேலும் சில வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதனால், இந்த உலகக்கோப்பையை நிச்சயம் கைப்பற்ற வேண்டும் என்று மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா காத்திருக்கின்றனர். இந்த உலகக்கோப்பையை மெஸ்ஸி வென்றுவிட்டால் கால்பந்தில் அவர் கால்பதிக்காத வெற்றியே கிடையாது என்பது போல் அவருடைய கால்பந்து வாழ்க்கை அமையும். 

நடப்பு கால்பந்து உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணியின் போட்டி விவரம்:

அர்ஜென்டினா அணி குரூப் டி-இல் இடம்பெற்றுள்ளது

முதல் போட்டி: ஐஸ்லாந்து - ஜூன் 16

2-ஆவது போட்டி: குரோஷியா - ஜூன் 21

3-ஆவது போட்டி: நைஜீரியா - ஜூன் 26

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com