ஐபிஎல் வரலாற்றின் மோசமான பந்துவீச்சு: முதலிரண்டு இடத்தில் ஹைதராபாத் வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை சன்ரைசர்ஸின் பசில் தம்பி பெற்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை சன்ரைசர்ஸின் பசில் தம்பி பெற்றார். 

ஐபிஎல்-இன் நேற்றைய (வியாழக்கிழமை) போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக களமிறங்காததால் மாற்று வீரராக பசில் தம்பி விளையாடும் அணியில் சேர்க்கப்பட்டார்.  

பின்னர், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதில், பெங்களூரு பேட்ஸ்மேன்கள் குறிப்பாக ஹைதராபாத் அணியின் பசில் தம்பி பந்துவீச்சை புரட்டிப் போட்டனர். 

பசில் தம்பி 8வது ஓவரின் போது தான் பந்துவீச வந்தார். அவரை மொயீன் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு வரவேற்றார். அதே ஓவரின் 4வது பந்தில் டி வில்லியர்ஸ் 1 பவுண்டரி அடிக்க முதல் ஓவரிலேயே தம்பி நெருக்கடிக்கு உள்ளானார். முதல் ஓவரில் 19 ரன்களை வாரி வழங்கியதால் வில்லியம்ஸன் தம்பிக்கு பந்தை தராமல் சற்று ஓய்வளித்தார். 

அதன் பிறகு மீண்டும் 13வது ஓவரை வீசுவதற்காக வில்லியம்ஸன் அவரை அழைத்தார். இந்த முறையும் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மொயின் அலி தம்பியை நம்பிக்கை இழக்கச் செய்தார். அதே ஓவரில் டி வில்லியர்ஸ் தன் பங்குக்கு 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து மிரட்டினார். அதுவும் அவர் அடித்த அந்த் சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே சென்றது. இதன் மூலம் இந்த ஓவரில் ஒரு 18 ரன்கள் என முதலிரண்டு ஓவர்களில் மொத்தம் 37 ரன்களை வாரி வழங்கினார். 

பின்னர், தனது பந்துவீச்சை புரட்டியெடுத்த டி வில்லியர்ஸ் மற்றும் மொயீன் அலியை ரஷித் கான் வீழ்த்தி நம்பிக்கை அளித்தார். அதனால், 16வது ஓவரை மீண்டும் தம்பி வீசினார்.  வந்தவர் போனவரெல்லாம் விளாசினர் என்பது போல் டி கிராண்ட்ஹோம் அந்த ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார். அதனால், இந்த ஓவரும் தம்பிக்கு சாதகமாக அமையவில்லை. தம்பி வீசிய முதல் 3 ஓவர்களில் 51 ரன்கள்.    

ஹைதராபாத் அணி ஒரு பந்துவீச்சாளர் குறைவாக இருந்ததால் வேறு வழியின்றி அவருக்கே மீண்டும் ஒரு ஓவரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நடுகள ஓவர்களிலேயே மிரட்டிய பெங்களூரு பேட்ஸ்மேன்கள் கடைசி கட்டதத்தில் தம்பியை சும்மா விடுவார்களா.

டி கிராண்ட்ஹோம் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி தொடங்கி வைத்தார். பின்ன்ர, 3வது பந்தை சர்பிராஸ் பவுண்டரிக்கு விரட்ட நடப்பு சீசனில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை பசில் தம்பி பெற்றார். அடுத்த பந்து சிக்ஸருக்கு பறக்க, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை தன் பெயருக்கு மாற்றி எழுதினார். 

4 ஓவர்களை வீசிய தம்பி ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 70 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி நிச்சயம் புவனேஷ்வர் குமாரின் இழப்பை எண்ணி வருத்தமடைந்திருக்கும்.  

முன்னதாக,  2013ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இதே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 4 ஓவர்கள் வீசி விக்கெட் வீழ்த்தாமல் 66 ரன்கள் வாரி வழங்கினார். இந்த மோசமான சாதனையை தற்போதைய ஹைதராபாத் வீரர் பசில் தம்பி நேற்று முறியடித்தார்.  

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர்கள்: 

பசில் தம்பி - 4 ஓவர்கள் 70 ரன்கள் (2018)
இஷாந்த் சர்மா - 4 ஓவர்கள் 66 ரன்கள் (2013)
உமேஷ் யாதவ் - 4 ஓவர்கள் 65 ரன்கள் (2013)
சந்தீப் சர்மா - 4 ஓவர்கள் 65 ரன்கள் (2014)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com