வெள்ளிப் பதக்கம்: இறுதிச்சுற்றில் மீண்டும் தோல்வியடைந்தார் சிந்து! ரசிகர்கள் ஏமாற்றம்!

தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிச்சுற்றிலும் தோல்வியடைந்து ரசிகர்களை மிகவும் ஏமாற்றியுள்ளார்...
வெள்ளிப் பதக்கம்: இறுதிச்சுற்றில் மீண்டும் தோல்வியடைந்தார் சிந்து! ரசிகர்கள் ஏமாற்றம்!

மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 

ஆசியப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்து வரலாறு படைத்துள்ளார். ஆசியப் போட்டி பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றில் முதன்முறையாக நுழைந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இறுதிச்சுற்றில் அவர் சீன தைபேவைச் சேர்ந்த தாய் ஹு யிங்கை எதிர்கொண்டார். 

ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி முன்னிலை பெற்றார் தாய். இதனால் முதல் செட்டில் 10-5 என முன்னிலை பெற்றார். டிராப் ஷாட்களில் சிந்துவைத் திணறடித்தார் தாய். இதனால் 15-10 எனத் தொடர்ந்து முன்னிலை பெற்றார். கடைசியில் 21-13 என முதல் செட்டை வென்றார் தாய்.

2-வது செட்டில் தாய்-ன் ஆக்ரோஷத்துக்கு ஓரளவு ஈடு கொடுத்தார் சிந்து. இதனால் இருவரும் அடுத்தடுத்துப் புள்ளிகளைப் பெற்றார்கள். எனினும் ஆரம்பத்தில் தாய் 10-7 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய தாய், 2-வது செட்டை 21-16 என வென்று தங்கப் பதக்கத்தை வென்றார். 13-21, 16-21 என இறுதிச்சுற்றில் தோற்ற சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 

2016 ரியோ ஒலிம்பிக்கில் இறுதியில் தோற்று வெள்ளி வென்றார் சிந்து. அதே போல் 2017, 2018 உலக சாம்பியன் போட்டியிலும், 2018 காமன்வெல்த் போட்டியிலும் இறுதியில் தோற்று வெள்ளி மட்டுமே வென்றார். ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டி, உலக சாம்பியன்ஷிப் என தொடர்ந்து முக்கியமான போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் தோல்வியடைந்த சிந்து தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிச்சுற்றிலும் தோல்வியடைந்து ரசிகர்களை மிகவும் ஏமாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com