ஆசியப் போட்டி 11-ஆவது நாள்: இந்தியாவுக்கு இன்று இரண்டு தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 11-வது நாளான இன்று (புதன்கிழமை) இந்தியா 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசியப் போட்டி 11-ஆவது நாள்: இந்தியாவுக்கு இன்று இரண்டு தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 11-வது நாளான இன்று (புதன்கிழமை) இந்தியா 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி இந்தியா 11 தங்கம், 20 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்களுடன் 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

இதில் புதன்கிழமை இந்தியா வென்ற பதக்கம் மற்றும் வெற்றி தோல்வி நிலவரங்கள்:

ஆடவர் மும்முறை தாண்டுதல்:

மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். இதன்மூலம், அவர் 48 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியப் போட்டி மும்முறை தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கத்தை பெற்றுத் தந்தார். இதற்கு முன், 1970-இல் இந்தியாவின் மோஹிந்தர் சிங் கில் மும்முறை தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். 

மகளிர் ஹெப்டத்லான்:

ஹெப்டத்லான் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் 6026 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம், இவர் ஆசியப் போட்டி ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 

இதில், மற்றொரு இந்திய வீராங்கனையான  பூர்ணிமா ஹெம்ப்ராம் 5837 புள்ளிகள் பெற்று 4-ஆவது இடத்தை பிடித்தார்.

200 மீட்டர் ஓட்டப்பந்தயம்:

இந்தியாவின் டுட்டி சந்த் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.20 விநாடிகளில் இலக்கை அடைந்து 2-ஆவது இடம் பிடித்தார். இவர், ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம், இவர் நடப்பு ஆசியப் போட்டியில் 2-ஆவது வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.   

கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ்:

கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் சரத் கமல் மற்றும் மனிகா பத்ரா ஜோடி இன்று தங்களது அரையிறுதி போட்டியில் சீன ஜோடியை எதிர்கொண்டது. இதில், இந்திய ஜோடி 9-11, 5-11, 13-11, 4-11, 8-11 என்கிற செட் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதன் மூலம், ஆசியப் போட்டி கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளனர். 

4*400 மீட்டர் ஆடவர் ரிளே:

இதில், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம்:

இந்தியாவின் மன்ஜித் சிங் மற்றும் ஜின்சன் ஜான்சன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். 

ஆடவர் குத்துச்சண்டை:

ஆடவர் குத்துச்சண்டை 49 கிலோ எடை லைட் ஃபிளை காலிறுதி சுற்றில் இந்திய வீரர் அமித் வெற்றி பெற்றார். 

ஆடவர் குத்துச்சண்டை 75 கிலோ எடை மிடில் பிரிவு காலிறுதியில் விகாஸ் கிருஷ்ணன் வெற்றி பெற்றார். 

ஹாக்கி மகளிர்:

மகளிர் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

ஸ்குவாஷ் மகளிர் அணி:

இந்திய ஸ்குவாஷ் மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

புதன்கிழமை நிலவரப்படி பதக்கப் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது. சீனா 102 தங்கம், 67 வெள்ளி, 50 வெண்கலம் என மொத்தம் 219 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்திலேயே நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com