அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகும் ஓய்வறையைச் சுத்தமாக்கித் தந்த ஜப்பான் வீரர்கள்! குவியும் பாராட்டுகள்!

இக்கட்டான நேரத்திலும் அறையைச் சுத்தப்படுத்துவதில் கவனம் செலுத்திய ஜப்பான் வீரர்களுக்குப் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள்...
அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகும் ஓய்வறையைச் சுத்தமாக்கித் தந்த ஜப்பான் வீரர்கள்! குவியும் பாராட்டுகள்!

உலகக் கோப்பை போட்டிக்கு ஆசியாவில் இருந்து சவூதி அரேபியா, ஜப்பான், தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தகுதி பெற்றன. இவற்றில் ஜப்பான் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. குரூப் ஜி பிரிவில் முதலிடம் பெற்ற பெல்ஜியம் அணியுடன் ரோஸ்டோவ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோதியது.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. தரவரிசையில் ஜப்பானை விடவும் 58 இடங்கள் முன்னிலையில் இருக்கும் பெல்ஜியம் அணி இரண்டாவது பாதில் 0-2 என பின்தங்க வேண்டிய நிலைமை உருவானது. இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஜெங்கியும் டகாஷியும் தலா ஒரு கோல் அடித்து நம்பமுடியாத முன்னிலையை தங்கள் அணிக்குத் தந்தார்கள். இதனால் ஜப்பான் அணி காலிறுதிக்கு நிச்சயம் தகுதி பெறும் என்கிற நம்பிக்கை கால்பந்து ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 69வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் வெர்டொன்கென் கோல் அடித்து பெல்ஜியம் ரசிகர்களை ஆறுதல்படுத்தினார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை நிகழ்த்தியதால் 74-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது பெல்ஜியம். இதனால் நேரிலும் தொலைக்காட்சியிலும் இணையம் வழியாகவும் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் பரபரப்பு அடைந்தார்கள். ஆட்ட நேரம் முடிந்து கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் வெற்றி கோல் அடிக்கக் கூடுதலாக முயற்சி செய்தன. கடைசியில் பெல்ஜியத்தின் சாட்லி அட்டகாசமான கோல் அடித்து நம்பமுடியாத வெற்றியைத் தன் அணிக்கு ஏற்படுத்தினார். இதனால் 0-2 என்கிற மோசமான நிலைமையிலிருந்து 3-2 என வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது பெல்ஜியம் அணி.

47’ #பெல்ஜியம் 0-1 #ஜப்பான் 
52’ #பெல்ஜியம் 0-2 #ஜப்பான் 
69’ #பெல்ஜிய 1-2 #ஜப்பான் 
74’ #பெல்ஜியம் 2-2 #ஜப்பான் 
94’ #பெல்ஜியம் 3-2 #ஜப்பான் 

காலிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைக்கும் என்று நம்பிக்கை வைத்த ஜப்பான் ரசிகர்கள் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். இருப்பினும் கடுமையாகப் போராடித் தோற்ற ஜப்பான் அணிக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஜப்பான் ரசிகர்கள், குப்பையை ஒழுங்குபடுத்தி இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது பரவலாகப் பாராட்டைப் பெற்று வருகிற நிலையில் தற்போது ஜப்பான் வீரர்களும் அத்தகைய பாராட்டுகளைப் பெற்றுள்ளார்கள்.

இதுபோன்ற அதிர்ச்சித் தோல்விகளின் முடிவில் வீரர்கள் ஓய்வறைக்கு வந்து அங்குள்ள பொருள்களை உடைத்துச் சேதப்படுத்துவதை நாம் நிறைய கண்டுள்ளோம். ஆனால் ஜப்பான் வீரர்களோ சோகம் மனத்தில் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அல்லது அதனால் மோசமான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் தங்களுடைய ஓய்வறையைச் சுத்தம் செய்து மைதான நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்கள். மேலும், ரஷிய மொழியில் நன்றி என்றும் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். இக்கட்டான நேரத்திலும் அறையைச் சுத்தப்படுத்துவதில் கவனம் செலுத்திய ஜப்பான் வீரர்களுக்குப் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

வீரர்கள் மட்டுமல்லாமல் நேற்றும் ஜப்பான் ரசிகர்கள் நம்பமுடியாத தோல்விக்குப் பிறகு மைதானத்தில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். இதனால் துப்புரவுப் பணியாளர்களின் உதவியின்றி மைதானம் ஜப்பான் ரசிகர்களின் நடவடிக்கைகளால் சுத்தமாக மாறியது. இந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com