உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இப்படியொரு பெனால்டியைத் தர மாட்டார்கள்: குரோஷிய அணியின் பயிற்சியாளர் விமரிசனம்!

நாங்கள் நன்றாக விளையாடினாலும் பெனால்டி எங்களைக் கீழே தள்ளிவிட்டது...
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இப்படியொரு பெனால்டியைத் தர மாட்டார்கள்: குரோஷிய அணியின் பயிற்சியாளர் விமரிசனம்!

பிரான்ஸ்-குரோஷியா அணிகள் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 இறுதி ஆட்டம் மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது.

குரோஷியா சேம்சைட் கோல்: 18-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் பார்வர்ட் கிரைஸ்மேன் ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் அடித்த பந்தை குரோஷிய வீரர் மரியோ மண்ட்ஸுகிக் தனது தலையால் தடுக்க முயன்ற போது, சேம் சைட் கோலானது. இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் குரோஷிய அணியின் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால் 28-ஆவது நிமிடத்தில் அதன் வீரர் விடா கடத்தி அனுப்பிய பந்தை இவான் பெரிஸிக் அற்புதமாக கோலாக்கினார். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக 38-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் புரிந்த தவறால் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பிசகின்றி கோலாக்கினார் பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன். இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் குரோஷிய வீரர்களின் ஆட்டம் சோபிக்கவில்லை. பிரான்ஸ் அணி வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்தியதன் விளைவாக 59-ஆவது நிமிடத்தில் அதன் மிட்பீல்டர் போக்பா கோலடித்தார்.  அதன் தொடர்ச்சியாக 65-ஆவது நிமிடத்தில் ஹெர்ணான்டெஸ் அனுப்பிய பந்தை இளம் வீரர் மாப்பே 25 அடிகள் தூரத்தில் இருந்து அற்புதமாக கோலாக்கினார். 68-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் வசம் இருந்த பந்தை பறித்து குரோஷிய பார்வர்ட் மரியோ மண்ட்ஸுகிக் கோலாக்கினார். பின்னர் குரோஷிய வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தபோது பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிடைத்தது. குரோஷிய வீரரின் கையில் பந்து பட்டதால் பெனால்டி தரப்பட்டது. இதுகுறித்து குரோஷியப் பயிற்சியாளர் டலிக் விமரிசனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

இரண்டாவது கோலை பெனால்டி மூலமாக அடித்தது பிரான்ஸ் அணி. அதைப் பற்றி நான் ஒரு வாக்கியத்தில் கூறுகிறேன் - உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இப்படியொரு பெனால்டியைத் தரமாட்டார்கள். இப்படியொரு போட்டியில் இப்படிப்பட்ட பெனால்டிக்கு வேலையில்லை. நாங்கள் நன்றாக விளையாடினாலும் பெனால்டி எங்களைக் கீழே தள்ளிவிட்டது. அதற்குப் பிறகு மீண்டுவருவது கடினமாகிவிட்டது. 

உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாங்கள் ஆர்வமாக இருந்தோம். ஆனால் கால்பந்து விளையாட்டின் மகத்துவம் இதுதான். பிரான்ஸ் அணி எங்களை ஆச்சர்யப்படுத்தவில்லை. சேம் சைட் கோலும் பெனால்டியும் நாங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இந்தப் போட்டியில் எங்களுக்கு அதிர்ஷ்டம் அமையவில்லை. நான்கு கோல்களை எதிரணி அடிக்கும்போது அந்த ஆட்டத்தை உங்களால் வெல்ல முடியாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com