ரூ. 260 கோடி பரிசுத்தொகை வென்ற ‘வாலிபர் சங்கம்’: உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் சாதனைத் துளிகள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று...
ரூ. 260 கோடி பரிசுத்தொகை வென்ற ‘வாலிபர் சங்கம்’: உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் சாதனைத் துளிகள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மீண்டும் ஒரு பிரெஞ்சுப் புரட்சியை நிகழ்த்தி உள்ளது.

பிரான்ஸ்-குரோஷியா அணிகள் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 இறுதி ஆட்டம் மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது.

கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி 21-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கின. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் முதல் சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 16 அணிகள் வெளியேறின. ரவுண்ட் 16 எனப்படும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் ஜாம்பவான் ஆர்ஜென்டீனா, போர்ச்சுகல் உள்ளிட்டவையும், காலிறுதி ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன்கள் பிரேஸில், உருகுவே, ஸ்பெயின் உள்ளிட்டவையும் வெளியேறின.

பிரான்ஸ்-குரோஷிய ஏற்கெனவே 5 முறை மோதியதில் பிரான்ஸ் மூன்று ஆட்டங்களில் வென்றுள்ளது. இரு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

ஆட்டம் தொடங்கியதுமே இரு அணிகளின் வீரர்களும் ஆதிக்கம் செலுத்த தலைப்பட்டனர். குரோஷியா சேம்சைட் கோல்: 18-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் பார்வர்ட் கிரைஸ்மேன் ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் அடித்த பந்தை குரோஷிய வீரர் மரியோ மண்ட்ஸுகிக் தனது தலையால் தடுக்க முயன்ற போது, சேம் சைட் கோலானது. இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் குரோஷிய அணியின் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால் 28-ஆவது நிமிடத்தில் அதன் வீரர் விடா கடத்தி அனுப்பிய பந்தை இவான் பெரிஸிக் அற்புதமாக கோலாக்கினார். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 38-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் புரிந்த தவறால் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பிசகின்றி கோலாக்கினார் பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன். இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் குரோஷிய வீரர்களின் ஆட்டம் சோபிக்கவில்லை. பிரான்ஸ் அணி வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்தியதன் விளைவாக 59-ஆவது நிமிடத்தில் அதன் மிட்பீல்டர் போக்பா கோலடித்தார். 

அதன் தொடர்ச்சியாக 65-ஆவது நிமிடத்தில் ஹெர்ணான்டெஸ் அனுப்பிய பந்தை இளம் வீரர் மாப்பே 25 அடிகள் தூரத்தில் இருந்து அற்புதமாக கோலாக்கினார். 68-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் வசம் இருந்த பந்தை பறித்து குரோஷிய பார்வர்ட் மரியோ மண்ட்ஸுகிக் கோலாக்கினார். 

பின்னர் குரோஷிய வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப் போட்டியின் சாதனைத் துளிகள்

* போட்டியை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ. 260 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற குரோஷிய அணிக்கு ரூ. 192 கோடி ரொக்கப் பரிசளிக்கப்பட்டது. 

கால்பந்து உலகக் கோப்பையை வென்றுள்ள அணிகள்

5 - பிரேஸில்
4 - இத்தாலி/ஜெர்மனி
2 - பிரான்ஸ்/ உருகுவே/ஆர்ஜென்டீனா
1 - இங்கிலாந்து/ ஸ்பெயின்

* கடந்த மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளும் கூடுதல் நேரம் வரை சென்றன. 2006, 2010, 2014. அதிலும் 2006 உலகக் கோப்பை இறுதிப் போட்டி பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. ஆனால் இந்த வருடம் அத்தகைய கூடுதல் நேரம் தேவைப்படவில்லை. 

* தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1998-ல் வென்றபோது தரவரிசையில் 18-வது இடத்தில் இருந்தது. 

* இறுதிப்போட்டி என்றாலே பெரிய அளவில் வெல்வதுதான் பிரான்ஸ் அணியின் பாணிபோல. 1998-ல் பிரேஸிலை 3-0 என்கிற கோல் கணக்கில் வென்றது. நேற்றைய ஸ்கோர்: 4-2.

* 1958-ல் பீலே கோல் அடித்தபிறகு அதேபோல இறுதிப் போட்டியில் கோல் அடித்த டீன் ஏஜ் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் 19 வயது வீரர் மாப்பே. நேற்று பிரான்ஸின் மூன்றாவது கோலை அவர் அடித்தார். 

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இளம் வீரர்கள்

1958 - பீலே - 17 வருடம் 249 நாள்கள்
2018 - மாப்பே - 19 வருடம் 207 நாள்கள் 

* வீரராகவும் பயிற்சியாளராகவும் உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது நபர் என்கிற பெருமை பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸுக்குக் கிடைத்துள்ளது. 1998-ல் அவர் கேப்டனாக இருந்தபோது பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. தற்போது பயிற்சியாளராகவும் அவர் உலகக் கோப்பையை வென்றுள்ளார். இதற்கு முன்பு மரியோ ஸகால்லோ (1958, 1970), பிரான்ஸ் பெக்கன்பேர் (1974, 1990) ஆகியோர் இச்சாதனையைப் புரிந்தவர்கள். டெஸ்சாம்ப்ஸ் போல பெக்கன்பேரும் கேப்டனாகவும் இருந்து உலகக் கோப்பையை வென்றவர். ஜெர்மனி அணியின் கேப்டனாக இருந்து 1970-ல் உலகக் கோப்பையை வென்றதோடு பயிற்சியாளராக 1990-லும் கோப்பையை வென்றார். 

* குரோஷியாவின் கோல்கீப்பர் டேனிஜெல் சுபசிக், பிரான்ஸின் ஏஎஸ் மொனாகோ கிளப்பைச் சேர்ந்தவர். அந்த கிளப்பைச் சேர்ந்த இதர கோல்கீப்பர்களான ரொமிரோ (2014), ஸ்டேகெலன்பர்க் (2010), பர்தேஸ் (2006) ஆகியோரும் குரோஷிய கோல்கீப்பர் போல உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் தோல்வியை அடைந்துள்ளார்கள். 

* பிரான்ஸ் அணியின் சராசரி வயது - 25 வருடம் 10 மாதங்கள். 1970-ல் இதேபோல 25 வருடம் 9 மாதங்களைச் சராசரி வயதாகக் கொண்ட பிரேஸில் அணி உலகக் கோப்பையை வென்றது. (உலகக் கோப்பைப் போட்டியில் குறைந்தபட்சம் ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடியவர்களைக் கொண்டு இந்த வயது கணக்கிடப்பட்டுள்ளது.)

* இப்படியொரு ஆட்டம் அமையும் என குரோஷிய வீரர் மரியோ மண்ட்ஸுகிக் எண்ணியிருக்கமாட்டார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சேம் சைட் கோலடித்த முதல் வீரர் என்கிற சங்கடமான பெருமையை அவர் பெற்றுள்ளார்.

* 1930, 1938, 1966, 2018 ஆகிய உலகக் கோப்பைகளின் இறுதிப் போட்டிகளில் தலா 6 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 1958 இறுதிப்போட்டியில் 7 கோல்கள் அடிக்கப்பட்டன. ஸ்வீடனை 5-2 எனத் தோற்கடித்தது பிரேஸில். 

* பிரான்ஸ் அணியின் தடுப்பாட்ட வீரர், அடில் ரமி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010-லிருந்து பிரான்ஸ் அணிக்காக விளையாடியுள்ள ரமி, 35 சர்வதேச ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். பிரான்ஸ் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தாலும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் களத்தில் இறங்கி விளையாட ரமிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

இறுதிப் போட்டியில் வழங்கப்பட்ட விருதுகள்

சிறந்த வீரர்: தங்கக் கால்பந்து விருது: லுகா மொட்ரிக் (குரோஷியா) 

வெள்ளிக் கால்பந்து விருது: ஈடன் ஹஸார்ட் (பெல்ஜியம்) 

வெண்கலக் கால்பந்து விருது: கிரைஸ்மேன் (பிரான்ஸ்)

அதிக கோல்கள்: தங்கக் காலணி: ஹேரி கேன் (இங்கிலாந்து), ஆறு கோல்கள் 

வெள்ளிக் காலணி: கிரைஸ்மேன் (பிரான்ஸ்), நான்கு கோல்கள் (கோல் அடிக்க உதவியதைக் கணக்கில் கொண்டும் வெள்ளி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.)

வெண்கலக் காலணி: ரொமேலு லுகாகு (பெல்ஜியம்), நான்கு கோல்கள் 

சிறந்த கோல் கீப்பர்: தங்கக் கையுறை: கோர்டியாஸ் (பெல்ஜியம்) 

சிறந்த இளம் வீரர்: மாப்பே (பிரான்ஸ்) 

ஃபேர் பிளே விருது: ஸ்பெயின் 

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன்:  கிரைஸ்மேன் (பிரான்ஸ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com