இந்தியாவில் தொற்றிய கால்பந்து ஜுரம்: தங்கம், வீடு, கேக் என பரவியது

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் தாக்கம் இந்தியாவிலும் பரவியுள்ளது.
இந்தியாவில் தொற்றிய கால்பந்து ஜுரம்: தங்கம், வீடு, கேக் என பரவியது

உலகக் கோப்பை கால்பந்து 2018 திருவிழா வியாழக்கிழமை இரவு மாஸ்கோவின் லுஷ்னிகி விளையாட்டரங்கில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில் 2018-ம் ஆண்டு 21-வது உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பு ரஷியாவுக்கு கிடைத்தது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையடுத்து இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பலர் இதை தங்கள் வழிகளில் கொண்டாடி வருகின்றனர். தொலைக்காட்சிகளில் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் தங்களின் தனித்துவமான திறமைகளாலும் கால்பந்தின் மீதான தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள பேக்கரி மற்றும் இனிப்பகத்தில் கால்பந்து உலகக் கோப்பை நினைவாக ரசிகர்களின் கோரிக்கைளின் அடிப்படையில் பிரத்யேகமான கேக் மற்றும் இனிப்பு வகைகளை வடிவமைத்து வருகிறது. இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் கூறுகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்கள். எனவே அவர்களின் கோரிக்கைகளின் பேரில் இதைச் செய்து வருகிறோம். எங்களது வாடிக்கையாளர்களும் இதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

அதுபோல மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியைச் சேர்ந்த மற்றொரு பேக்கரி உரிமையாளர், இந்த உலகக் கோப்பையை மையப்படுத்தி கேக்குகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார். மேலும் விரைவில் கால்பந்து உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் என்று தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவைப் பகுதியைச் சேர்ந்த பிரபல மினியேச்சர் ஆர்டிஸ்ட் (ஒரு பொருளின் சிறு மாதிரி வடிவமைப்பாளர்) பி.மாரியப்பன், 2018 உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் வடிவத்தை 900 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு வடிவமைத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை ஊக்கப்படுத்துவதே தனது நோக்கம் எனவும், 2022 உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணி இடம்பிடிக்கும் எனவும் மாரியப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தம்பதி தங்களது வீட்டை பிரேசில் நாட்டின் தேசியக் கொடியின் நிறத்தில் வண்ணமடித்துள்ளனர். மேலும் பிரேசில் கால்பந்து அணியின் பிரபல வீரர்களின் ஓவியங்களையும் வீட்டின் சுவர்களில் வரைந்துள்ளனர். மேலும் தங்களது வீட்டுக்கு 'பிரேசிலின் இல்லம்' ("House of Brazil") என்று பெயரிட்டுள்ளனர். இந்த உலகக் கோப்பையில் தங்களின் விருப்பத்துக்குரிய பிரேசில் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இதைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com