செனகல் அதிரடி, (2-1) போலந்து தோல்வி

வலுவான போலந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் செனகல் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

வலுவான போலந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் செனகல் அணியிடம் தோல்வியைத் தழுவியது.
குரூப் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து-செனகல் அணிகள் இடையிலான ஆட்டம் மாஸ்கோ ஸ்பார்டக் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இரு அணிகள் இடையிலான ஆட்டம் தொடங்கியவுடன் போலந்து அணியின் கை சிறிது நேரம் ஓங்கி இருந்தது. எனினும் செனகல் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சாடியோ மேன் தலைமையில் வீரர்கள் மெல்ல மெல்ல ஆட்டத்தை தாங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 
போலந்து வீரர் சேம்சைட் கோல்: 38-வது நிமிடத்தில் செனகல் வீரர் மேன் பந்தை கடத்தி சக வீரர் இட்ரிஸா குயேவுக்கு அனுப்பினார். அதைத் தடுத்து போலந்து வீரர் தியாகோ சியோனக் வெளியில் அடிக்க முயன்ற போது, கோல்கம்பத்துக்குள் சென்று சேம்சைட் கோலானது. பின்னர் சாடியோ மேனுக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோலடிக்க முயன்றும் முடியவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் செனகல் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் போலந்து நட்சத்திர வீரர் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி தீவிரமாக கோலடிக்க முயற்சி மேற்கொண்டார். சமன் செய்து விட வேண்டும் என்ற நோக்கில் போலந்து அணியினர் சாரை சாரையாக தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டனர்.
எனினும் 60-வது நிமிடத்தில் போலந்து வீரர் கியோசோவியக் வலுவின்றி தனது அணி கோல்கீப்பரிடம் பந்தை அடித்தார். அப்போது செனகல் முன்கள வீரர்கள் மியாங் நியாங் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தார். இதனால் 2-0 என செனகல் முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிய சிறிது நேரம் இருக்கையில் 86-ஆவது நிமிடத்தில் போலந்து வீரர் கிரகோர்ஸ் கியோசோவியக் ப்ரீ கிக் வாய்ப்பு மூலம் ஓரே கோலை அடித்தார். இறுதியில் செனகல் அணி 2-1 என போலந்தை வீழ்த்தி, உலகக் கோப்பையில் ஆப்ரிக்க அணியின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com