இன்றைய உலகக் கோப்பை ஆட்டங்கள்: காலிறுதிக்குத் தகுதி பெறவேண்டிய நெருக்கடியில் நட்சத்திர அணிகள்!

பட்டம் வெல்லும் அணி எனக் கருதப்படும் ஆர்ஜென்டீனா இந்த ஆட்டத்தில் வென்றால் தான் போட்டியில் நீடிக்க முடியும்...
இன்றைய உலகக் கோப்பை ஆட்டங்கள்: காலிறுதிக்குத் தகுதி பெறவேண்டிய நெருக்கடியில் நட்சத்திர அணிகள்!

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த மூன்று ஆட்டங்களின் முடிவுகளும் காலிறுதி வரிசையை நிர்ணயிப்பதாக உள்ளன. எனவே ரசிகர்கள் இந்த மூன்று ஆட்டங்களின் முடிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

பிரான்ஸ் vs பெரு (ஆட்ட நேரம்: இரவு 8.30 மணி)

முந்தைய ஆட்டங்கள்

பிரான்ஸ் 2 ஆஸ்திரேலியா 1
பெரு 0 டென்மார்க் 1

குரூப் சி பிரிவில் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் உள்ள பிரான்ஸ் வியாழக்கிழமை பெரு அணியுடன் மோதுகிறது. தற்போது உலகக் கோப்பை 2018-இல் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் நிலையில் அந்த அணி ஏற்கெனவே ஆஸி. அணியை வென்று 3 புள்ளிகளுடன் உள்ளது. அதே பிரிவில் டென்மார்க் அணியும் 3 புள்ளிகளுடன் உள்ளது.

வலுவான அணியாக கூறப்படும் பிரான்ஸ் தனது முதல் ஆட்டத்தில் ஆஸி. அணியுடன் போராடி தான் வெல்ல முடிந்தது. இதற்கிடையே ஏனைய ஜாம்பவான் அணிகளான ஆர்ஜென்டீனா, பிரேஸில் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. நடப்பு சாம்பியன் ஜெர்மனியோ, மெக்ஸிகோவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால் தனது பிரிவில் முதலிடம் பெறும் முனைப்பில் பிரான்ஸ் உள்ளது.

இதற்கிடையே பெரு அணியுடன் பிரான்ஸ் மோதவுள்ளது. பிரான்ஸில் பால் போக்பா, கிளியன் மாப்பே, ஆலிவர் ஜெரார்ட், உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். அதே நேரத்தில் பெரு அணி பாவ்லோ கியுரோ நட்சத்திர வீரராக திகழ்கிறார். இரு அணிகளில் பிரான்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்றைய வெற்றியுடன் காலிறுதிக்குத் தகுதி பெறுமா பிரான்ஸ்?

ஆஸ்திரேலியா vs டென்மார்க் (ஆட்ட நேரம்: மாலை 5.30 மணி)

முந்தைய ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா 1 பிரான்ஸ் 2
டென்மார்க் 1 பெரு 0

டென்மார்க் ஏற்கெனவே பெருவை 1-0 என வென்று 3 புள்ளிகளுடன் உற்சாகமாக உள்ளது. அதே நேரத்தில் ஆஸி.அணி 1-2 என பிரான்ஸிடம் தோல்வியைத் தழுவியது. கடந்த 1986-இல் மட்டுமே டென்மார்க் தனது இரண்டு துவக்க சுற்று ஆட்டங்களிலும் வென்றிருந்தது.

ஐரோப்பிய அணிகளில் இரண்டாம் நிலை வலுவான அணியாக உள்ள டென்மார்க்கில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் சிறப்பான பார்முடன் காணப்படுகிறார். அதன் கோல்கீப்பர் கஸ்பர் சிமைச்சல் சிறப்பாக பெருவின் கோலடிக்கும் வாய்ப்புகளை தடுத்தார். கஸானில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்றால் தான் போட்டியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்பதால் ஆஸி. கடுமையாக போராடும் எனத் தெரிகிறது. கேப்டன் ஜெடிநாக், டிரென்ட் செயின்ஸ்பரி, ஜியாங்ஸு ஆகியோரை ஆஸி நம்பியுள்ளது. இந்த ஆட்டத்தில் டென்மார்க் அணிக்கே வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் அந்த
அணி காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆர்ஜென்டீனா vs குரோஷியா (ஆட்ட நேரம்: இரவு 11.30 மணி)

முந்தைய ஆட்டங்கள்

ஆர்ஜென்டீனா 1 ஐஸ்லாந்து 1
குரோஷியா 2 நைஜீரியா 0

குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆர்ஜென்டீனாவும்-குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. 

பலமான ஆர்ஜென்டீனா தனது தொடக்க ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் டிரா மட்டுமே செய்ய முடிந்தது. நட்சத்திர வீரர் மெஸ்ஸியால் பெனால்டி கிக் வாய்ப்பைக் கூட கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் ஆர்ஜென்டீனாவுக்கு 1 புள்ளி மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில் குரோஷியா 2-0 என நைஜீரிய அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் ஆர்ஜென்டீனாவை எதிர்கொள்கிறது. குரூப் டி பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

பட்டம் வெல்லும் அணி எனக் கருதப்படும் ஆர்ஜென்டீனா இந்த ஆட்டத்தில் வென்றால் தான் போட்டியில் நீடிக்க முடியும் என்பதால் குரோஷியாவுடன் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com