உலகக் கோப்பை கால்பந்து 2018 

கடந்த 2014-இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக சோச்சியில் பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் கட்டப்பட்டது. ஒலிம்பிக்கில் தொடக்க,
உலகக் கோப்பை கால்பந்து 2018 


பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் (பார்வையாளர்கள்: 48,000)
கடந்த 2014-இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக சோச்சியில் பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் கட்டப்பட்டது. ஒலிம்பிக்கில் தொடக்க, நிறைவு விழாக்கள் இதில் நடைபெற்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கூடுதலாக 6 ஆயிரம் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. 2018 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இங்கு 4 முதல் சுற்று ஆட்டங்கள், காலிறுதிக்கு முந்தைய ஆட்டம், ஒரு காலிறுதி ஆட்டம் என 6 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
கடந்த 2017-ஆம் ஆண்டு கன்பெடரேஷன்ஸ் போட்டி அரையிறுதி ஆட்டங்களும் இங்கு நடைபெற்றன.

ஏகடெரின்பர்க் அரேனா மைதானம் (பார்வையாளர்கள்: 45,000)


கடந்த 1957-இல் கட்டப்பட்ட இந்த மைதானம் முதலில் பல்நோக்கு வகையில் பயன்பட்டது. பின்னர் 2007-இல் மைதானம் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 2011-இல் முடிக்கப்பட்டதை அடுத்து, உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் மைதானங்களில் ஒன்றாக ஏகடெரின்பர்க் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், தொடக்கத்தில் பிஃபா ஒப்புதல் கிடைக்காததை அடுத்து, பின்னர் அந்த தரத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.
எஃப் சி யுரல் அணியின் சொந்த மைதானமாக இது உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியின் 4 முதல் சுற்று ஆட்டங்கள் இங்கு நடைபெறவுள்ளன.
5-ஆவது உலகக் கோப்பை (1954): மேற்கு ஜெர்மனி சாம்பியன்


1954-ம் ஆண்டு ஐந்தாவது உலகக் கோப்பை ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் மேற்கு ஜெர்மனி முதன்முறையாக சாம்பியன் ஆனது.
ஜூன் 16 முதல் ஜூலை 4- ஆம் தேதி வரை 19 நாள்கள் நடந்த இப்போட்டியில் 4 கண்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. 6 நகரங்களில் போட்டிகள் நடந்தன. இதில் அதிக கோலடித்தல், கோல் சராசரி போன்றவற்றில் சாதனைகள் படைக்கப்பட்டன. 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. தரவரிசையில் இடம் பிடித்த 8 நாடுகள், அதில் இடம் பெறாத நாடுகள் என பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. முதல் அரையிறுதியில் மேற்கு ஜெர்மனி 6-1 என ஆஸ்திரியாவையும், இரண்டாவது அரையிறுதியில் ஹங்கேரி 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயையும் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றன. மேற்கு ஜெர்மனி-ஹங்கேரி மோதிய இறுதி ஆட்டத்தைக் காண பெர்ன் மைதானத்தில் 60 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். தொடர் வெற்றி பெற்றிருந்த ஹங்கேரியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மேற்கு ஜெர்மனி முதல்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது.
மொத்த ஆட்டங்கள் 26 
மொத்த கோல்கள் 140 
பார்வையாளர்கள் 7,68,607 
அதிக கோலடித்தவர் சான்டோர் கோஸிஸ் (11)
டாப் 10 வீரர்கள்: 


பாவ்லோ டபாலா (ஆர்ஜென்டீனா)
ஆர்ஜென்டீனாவின் இளம் வீரரான பாவ்லோ டபாலா (23) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கெனவே ஜுவென்டஸ் அணி சார்பில் விளையாடி ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் இத்தாலியன் கால்சியோ அணிக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்.
இந்த சீசனில் 7 லீக் ஆட்டங்களில் 10 கோல்களை அடித்துள்ளார் டபாலா. ஆர்ஜென்டீனா அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு நிகராக வளரும் சிறந்த இளம் வீரர் என டபாலா புகழப்படுகிறார். பந்தை கடத்துவது, பாஸ் செய்வது, கோல்களை அடிப்பதில் சிறப்பாக செயல்படுகிறார். 
கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்லது மெஸ்ஸி போன்றவர்களுக்கு தான் நிகரில்லை எனக் கூறும் ஜுவென்டஸ் நட்சத்திரமான டபாலா, அவரது ஆட்டத்திறனால் விரைவில் அத்தகைய புகழை அடையப் போவது நிச்சயம். உலகக் கோப்பையில் டபாலா ஜொலித்து தனது ஆர்ஜென்டீனா அணியை தற்போதுள்ள தேக்க நிலையிலிருந்து வெற்றிக்கு அழைத்துச் செல்வாரா என 
ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com