சாதித்த சஞ்சு சாம்சனும் முடங்கிக் கிடக்கும் பாபா அபராஜித்தும்!

ஒரே வயதில், ஒன்றாக ஐபிஎல்-லுக்குள் நுழைந்த சஞ்சு சாம்சன், பாபா அபராஜித் ஆகிய இருவரில் ஒருவர் மட்டும்...
சாதித்த சஞ்சு சாம்சனும் முடங்கிக் கிடக்கும் பாபா அபராஜித்தும்!

இருவருக்கும் ஒரே வயது. இருவரும் 2013-ம் ஆண்டு 19 வயதில் ஐபிஎல்-லுக்குள் நுழைந்தார்கள். ஆனால் ஒருவர் கிரிக்கெட் உலகம் அறியும் வீரராகக் கவனம் பெற்றுவிட்டார். மற்றவர் இன்றுவரை ஒரு ஐபிஎல் போட்டியிலும் விளையாடவில்லை. இதுதான் சஞ்சு சாம்சன் - பாபா அபராஜித்தின் கதை.

ஐபிஎல் என்பது பலருக்கும் பல கதவுகளைத் திறந்துவைக்கும் வாய்ப்பாக உள்ளது. ரஞ்சி போட்டி உள்ளிட்ட பல முக்கியமான போட்டிகளில் திறமையை நிரூபித்துள்ள தமிழக வீரர் அபாரஜித்துக்கு ஐபிஎல் மட்டும் இன்றுவரை எட்டாக்கனியாக உள்ளது. 

இத்தனைக்கும் ஒரு சாதாரண அணிக்கு அவர் முதலில் தேர்வாகவில்லை. ஆனால் அதுதான் அவருடைய பிரச்னையாக இருந்திருக்கிறது.

2013-ம் வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வானார் பாபா அபராஜித். U19 உலகக்கோப்பையில் திறமையை வெளிப்படுத்தி அதிகக் கவனம் பெற்றதால் ஐபிஎல்-லிலும் தன்னை நிரூபிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அவர்மீது இருந்தது. ஆனால் நட்சத்திரங்கள் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரால் ஓர் ஆட்டத்தில்கூட இடம்பெறமுடியவில்லை. சரி, புணே அணிக்குத் தேர்வான பிறகாவது நிலைமை மாறும் என்றால் அதுவும் நடக்கவில்லை. 5-வது வருடமாக பாபா அபராஜித்தால் ஒரு ஐபிஎல் ஆட்டத்திலும் ஆடமுடியவில்லை. இந்த இளைஞனுக்கு இப்படி நேரும் என யாரால் கற்பனை செய்திருக்கமுடியும்?   

கடந்தவருடம் புணே அணி தொடர்ந்து தோற்றபோதும், பலருக்குக் காயம் ஏற்பட்டு விலகியபோதும்கூட தோனி பாபாவைச் சீந்தவில்லை. அதே பெஞ்ச்! 

அதற்குப் பிறகு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபராஜித் 63 பந்துகளில் (12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) 118 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். சரி இதற்குப் பிறகாவது அவருக்கு ராசி உண்டாகுமா என்றால் அதுவும் இல்லை. 

இந்தவருடம் ஸ்மித் தலைமையில் களமிறங்கும் பாபா அபராஜித், இதுவரை புணே விளையாடிய 3 போட்டிகளிலும் இடம்பெறவில்லை! 

சரி அப்படியே சஞ்சு சாம்சன் கதைக்கு வருவோம். பாபாவால் ஒரு ஐபிஎல் போட்டியிலும் விளையாடமுடியாமல் போகிறது. ஆனால் சஞ்சு இந்திய அணிக்குத் தேர்வாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ளார். 

2012-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்குத் தேர்வானார் சஞ்சு. அதில் சரியாக விளையாடததால் U19 உலகக்கோப்பையில் அவர் தேர்வாகவில்லை (ஆனால் இதில் பாபா அபராஜித்துக்கு வாய்ப்பு கிடைத்து தன்னைப் பெரிதாக நிரூபித்தார்.)

2013-ல் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தேர்வானார் சஞ்சு. அந்த வருடமே அந்த அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி சிறந்த இளம் வீரராகக் கவனம் பெற்றார். 

சரி இதுவரை சஞ்சு சாம்சன் எத்தனை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்? (பாபா இதைப் பார்க்கக்கூடாது!) 

2013: 11

2014: 13

2015: 14

2016: 14

2017: 2 (இதுவரை)

இப்படி ஐபிஎல்-லில் நுழைந்த வருடம் முதல் குறைந்தது 11 போட்டிகளிலாவது இடம்பெற்றுவிடுகிறார் சஞ்சு சாம்சன். கெவின் பீட்டர்சன், ரிக்கி பாண்டிங் என கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் இந்தக் கேரள இளைஞனை அறிவார்கள். நேற்று, புணே அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் விளாசியுள்ளார். இதனால் ஐபிஎல் சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுவிட்டார். ஆனால் பாபா அபராஜித் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின்போதும் தனக்கு இந்தமுறையாவது ஒரு வாய்ப்பு அமையுமா என ஏங்கிக்கொண்டிருக்கிறார். ஒரே வயது, ஒரே திறமை. ஆனால் இருவருக்கும் எப்படி வாழ்க்கை அமைகிறது பாருங்கள்!

நாளை குஜராத்துக்கு எதிராக புணே அணி விளையாடுகிறது. இதில் மட்டும் என்ன பெரிதாக மாற்றம் வந்துவிடமுடியும் என நினைக்கிறீர்கள்?  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com