'பூஜ்ஜியத்துடன் துவங்கிய ராஜ்ஜியம்'

டிசம்பர் 23, 2004-ம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங் மைதானத்தில் நீளமான தலைமுடியுடன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்த 23 வயது இளைஞன்...
'பூஜ்ஜியத்துடன் துவங்கிய ராஜ்ஜியம்'

டிசம்பர் 23, 2004-ம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங் மைதானத்தில் நீளமான தலைமுடியுடன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்த 23 வயது இளைஞன் களமிறங்குகிறான். சந்தித்த முதல் பந்திலேயே ரன்-அவுட் முறையில் டக்-அவுட்டாகி வெளியேறுகிறான். ஆனால், அதன்பிறகான காலகட்டங்களில் மைதானத்தில் அவனது நடவடிக்கைகள் மின்னல் வேகத்தில் இருந்தன.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு சச்சின் டெண்டுல்கரால் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்க, பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரால் கால்பந்தில் இருந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கிற்கு மாற, மற்றவை சரித்திரமானது.

மகேந்திர சிங் தோனி, வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2004-ம் ஆண்டில் இன்றைய தேதியில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை துவங்கி 14-ஆவது வருடத்ததை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறார்.

முதல் மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 22 ரன்கள், தேசிய அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகிறது. அப்போது அந்த திருப்புமுனை ஏற்படுகிறது. அன்றைய இந்திய அணியின் கேப்டனாக இருந்த சௌரவ் கங்குலி, விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3-ஆவது வீரராக பேட்டிங் செய்ய தோனியை களமிறக்குகிறார்.

தனது அதிரடி ஆட்டத்தால் 123 பந்துகளில் 148 ரன்களை விளாசி அனைவரது கவனத்தையும் தோனி பெற்றார். பின்னர் அதே வருடத்தின் கடைசியில் ஜெய்பூரில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது 145 பந்துகளில் 183 ரன்களைக் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இன்றுவரை இதுவே அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.

இதன்பின்னர் சர்வதேச அரங்கில் 20 ஓவர் வகை கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைகின்றன. 2007-ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இதிலிருந்து விலகி இளைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாக சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் தெரிவித்தனர்.

எனவே டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக வலம்வந்த யுவராஜ் சிங் தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகேந்திர சிங் தோனியிடம் கேப்டன் பொறுப்பு வந்தடைகிறது. தோனி தலைமையிலான அணியில் யுவராஜ், சேவாக், ஹர்பஜன் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பெற்றனர்.

இந்த தொடரின் போது ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளிலும் பொறுமை இழக்காத தன்மையும், ஆட்டத்தின் போது வித்தியாசமான நடைமுறைகளாலும் தோனியின் கேப்டன் யுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும், முதல் டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத்தந்து பெருமை சேர்த்தார். 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணிக்குப் பிறகு தோனி உலகக் கோப்பை பெற்றுத்தந்து சாதனைப் படைத்தார்.

இதற்கிடையில், அதே ஆண்டில் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலக, அதுவும் தோனியின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த முத்தரப்பு தொடரைக் கைப்பற்றி இதிலும் வெற்றியுடன் தொடங்கினார் தோனி.

கேப்டன் பதவியில் மட்டுமல்லாது விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார் தோனி. தனது மின்னல்வேக ஸ்டம்பிங்குகளால் விக்கெட் கீப்பிங்கிலும் முத்திரைப் பதித்தார். நாளடைவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நேரங்களில் களமிறங்கி கடைசி வரை போராடி பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தார். இதனால் உலகின் தலைசிறந்த ஃபினிஷர் என்ற பெறுமையைப் பெற்றார்.

இந்நிலையில், 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையையும் வசமாக்கினார். இதனால் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற அந்தஸ்து இந்தியாவுக்கு கிடைத்தது. பின்னர் 2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

இதன்மூலம் ஐசிசி-யின் முக்கிய மூன்று கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார் மகேந்திர சிங் தோனி. 

இதற்கிடையில் 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி சென்னையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் எடுத்தும், ஒரு கேட்ச்சும் பிடித்தார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிபி சீரிஸ் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரை பெற்றுத்தந்த முதல் இந்திய கேப்டனாக தோனி சாதித்தார். அச்சமயம் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே விலகினார். டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான 3-ஆவது ஆண்டிலேயே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் தோனி தேர்வுசெய்யப்பட்டார். 

இதனால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டார். டெஸ்ட் அணிகளில் கேப்டன் பொறுப்பேற்ற ஒரு வருடத்துக்குள்ளாக 2009-ம் ஆண்டு இந்திய அணி டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக முதலிடம் பிடித்தது.

தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரை 2008, 2010 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வென்றது. அதிலும் 2013-ம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வயிட்-வாஷ் செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் 40 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் அந்த அணியை வயிட்-வாஷ் முறையில் வெற்றிகண்ட முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. அதே தொடரின் போது சென்னையில் நடைபெற்ற போட்டியில் தோனி, 224 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். டெஸ்ட் அரங்கில் இதுவே அவரது அதிகபட்ச ஸ்கோர்.

தோனி கேப்டனாக பொறுப்பேற்றது முதல் வீரர்களின் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் அளித்தார். ஆட்டத்திறன் மிக்க வீரராக இருந்தாலும் உடற்திறன் இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறச் செய்தார். இது தோனியின் மீது பரவலான விமர்சனங்களையும் முன்வைத்தது. மூத்த வீரர்களுக்கு மதிப்பளிக்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டுகளையும் எழுப்பியது.

அதேநேரம், ஒரு கேப்டனாக அடுத்த கட்ட அணியையும் தயார் செய்யும் விதத்தில் அதிகளவிலான இளைஞர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளித்தார். தன்மீதான விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தனது கடமையைச் செய்து வந்தார். இந்த காலகட்டத்தில் மூத்த வீரர்களான டிராவிட், லட்சுமணன், சச்சின், கும்ப்ளே, கங்குலி, சேவாக் போன்றோர் அடுத்தடுத்து தங்கள் ஓய்வு முடிவை அறிவித்து வந்தனர்.

இதனால் இந்திய அணி மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க நேர்ந்தது. அந்நிய மண்ணில் தோல்விகள் அதிகரித்தது. தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்குமாறு குரல்கள் ஒலிக்கத் துவங்கின. ஆனாலும், சற்றும் மனம்தளராமல் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, அஸ்வின், ஜடேஜா போன்ற அடுத்தகட்ட வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து ஊக்குவித்து வந்தார். தோல்விகளில் தானே முன் நின்றும், வெற்றிகளில் இளம் வீரர்களை முன் நிறுத்தியும் வந்தார்.

இந்நிலையில், 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3-ஆவது போட்டியுடன் திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

அதேபோல், 2017-ம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதியுடன் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அடுத்த தலைமுறை அணிக்கு வழிவிடும் விதமாக இம்முடிவை எடுத்ததாக அறிவித்தார். இதனால், தற்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து ரக போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். 

கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2016 வரை இந்திய அணிக்கு 331 போட்டிகளில் மகேந்திர சிங் தோனி, கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஒரு அணிக்கு அதிகப் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர் என்ற சாதனையையும் இதன்மூலம் படைத்தார். அவற்றில் இந்திய அணிக்கு 178 வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். 

இவற்றில் கேப்டனாக செயல்பட்ட 60 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகளும், 18 தோல்விகளும் அடங்கும். 199 ஒருநாள் போட்டிகளில் 110 வெற்றிகளையும், 72 டி20 போட்டிகளில் 41 வெற்றிகளையும் பெற்றுத்தந்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக தோனியின் வெற்றி சதவீதம் 53.78 ஆகும்.

மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38.09 சராசரியுடன் 4,876 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும், 33 அரைசதங்களும் அடங்கும். இதுவரை 312 ஒருநாள் போட்டிகளில் பங்iகேற்று 9898 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 51.55 ஆகும். இதில் 10 சதங்களும், 67 அரைசதங்களும் அடங்கும். 

ஒரு விக்கெட் கீப்பராக 294 பேரை இதுவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அவற்றில் 256 கேட்சுகளும், 38 ஸ்டம்பிங்குகளும் அடங்கும். சிறந்த விக்கெட் கீப்பர்களில் 5-ஆவது இடத்தில் உள்ளார்.

மேலும், அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர், ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த விக்கெட் கீப்பர், ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர், ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர், ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை நாட்-அவுட் பேட்ஸ்மேனாக உள்ளது போன்ற எண்ணற்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் நம்ம 'தல' தோனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com