இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள்: கோலியின் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்தது ஏன்?

ஒன்று அவர்கள் விடுமுறைக்காக ஊருக்குச் செல்லக்கூடாது. அல்லது நாங்களும் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இதுபோல ஒரு மாதம் விடுமுறை...
இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள்: கோலியின் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்தது ஏன்?

கடந்த வருடம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது.

முதலில் டெஸ்ட் தொடர்தான் ஆரம்பமானது. நவம்பர் 9 அன்று ஆரம்பமான டெஸ்ட் தொடர் டிசம்பர் 20-ம் தேதி முடிவடைந்தது. 

உடனே அடுத்தச் சில நாள்களில் ஒருநாள் தொடர் ஆரம்பமாகவில்லை. இங்கிலாந்து அணியினர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகியவற்றைக் கொண்டாடுவதற்காக இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றார்கள். ஒருநாள் தொடர் சாவகாசமாக ஜனவரி 15-ம் தேதிதான் தொடங்கியது. அதாவது டெஸ்ட் தொடருக்கும் ஒருநாள் போட்டிக்கும் இடையே 25 நாள்கள் இடைவெளி!

இது கேப்டன் கோலியையைக் கோபப்படுத்தியது. இதனை முன்வைத்து கோலி அச்சமயத்தில் கூறியதாவது: இங்கிலாந்து செல்கிறபோது எங்களுக்கும் மூன்று டெஸ்டுகளுக்குப் பிறகு எட்டு நாள்களும் டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஒருநாள் தொடருக்கு முன் 25 நாள்கள் இடைவெளியும் தேவை. ஒன்று அவர்கள் விடுமுறைக்காக ஊருக்குச் செல்லக்கூடாது. அல்லது நாங்களும் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இதுபோல ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ளவேண்டும். தொடர்ந்து மூன்றரை மாதங்கள் விளையாடுவதில் அர்த்தமில்லை என்றார்.

இதனால் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி தகுந்த இடைவெளி விட்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் நேற்று வெளியிடப்பட்ட இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையில் அப்படியொன்றும் மாற்றங்கள் தென்படவில்லை. 

இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம்

டி20 தொடர்

ஜூலை 3 - முதல் டி20
ஜூலை 6 - 2-வது டி20
ஜுலை 8 - 3-வது டி20

ஒருநாள் தொடர்

ஜூலை 12 - முதல் ஒருநாள் போட்டி
ஜூலை 14 - 2-வது ஒருநாள் போட்டி
ஜூலை 17 - 3-வது ஒருநாள் போட்டி

டெஸ்ட் தொடர்

ஆகஸ்ட் 1 - முதல் டெஸ்ட்
ஆகஸ்ட் 9 - 2-வது டெஸ்ட்
ஆகஸ்ட் 18 - 3-வது டெஸ்ட்
ஆகஸ்ட் 30 - 4-வது டெஸ்ட்
செப்டம்பர் 7 - 5-வது டெஸ்ட்

இந்த அட்டவணையை விராட் கோலி எப்படி ஒப்புக்கொண்டார்? 3 டி20 போட்டிகளும் 3 ஒருநாள் போட்டிகளும் முடிவடைந்த இரு வாரங்களில் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. முதல் டெஸ்டுக்கு முன்பு எப்படியும் இருநாள் அல்லது மூன்று நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நடைபெறவும் வாய்ப்புண்டு. எனவே இங்கிலாந்து அணி அனுபவித்ததுபோன்ற ஒரு பெரிய விடுமுறை இந்திய அணிக்கு வழங்கப்படவில்லை. அவர்கள்போல ஒரு தொடர் முடிவடைந்தபிறகு ஊருக்குத் திரும்பி சிறிது ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் விளையாட வரமுடியாது. இரண்டரை மாதமும் இங்கிலாந்திலேயேதான் இருந்தாகவேண்டும். ஆனால் கோலி கேட்டுக்கொண்டபடி 3-வது டெஸ்ட்டுக்குப் பிறகு 7 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு 4-வது டெஸ்ட் தொடங்குகிறது. இன்னொன்று அங்குச் சென்று ஒரு மாதத்துக்குப் பிறகு டெஸ்ட் தொடர் தொடங்குவதால் அங்குள்ள தட்பவெப்பம் ஓரளவுக்குப் பழகிவிடும். இதுபோன்ற ஒன்றிரண்டு அம்சங்கள்தான் அட்டவணையில் தென்பட்ட சாதகமான விஷயங்கள்.  

டெஸ்ட் அணியில் இடம்பெறக்கூடிய பெரும்பாலான பந்துவீச்சாளர்களுக்கு வேண்டுமானால் ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு கிடைக்கலாம் (அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ்). ஆனால் கோலி, தவன், ரோஹித் சர்மா, பாண்டியா, புவனேஸ்வர் குமார் போன்றோர் நிச்சயம் ஒருநாள், டி20 தொடர்களிலும் ஆடவேண்டிய கட்டாயம் ஏற்படும். மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்றவர்கள் இவர்கள். இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள், டி20 தொடர்களைத் தவிர்க்கமுடியாது. 

எனவே ஒருநாள், டி20 தொடர்களை ஆடிமுடித்துவிட்டு ஒரேடியாக 5 டெஸ்டுகளில் ஆடுவதென்பது மிக மிக சிரமமான விஷயம். முதல் மூன்று டெஸ்டுகளிலேயே மிகுந்த சோர்வு ஏற்பட்டுவிடும். அதிலும் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல்-லில் ஆடிமுடித்துவிட்டு இந்திய அணி இந்தத் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. ஜூனில் வேறொரு தொடரில் பங்கேற்கிறதா என இதுவரை தகவல் இல்லை. ஒரு மாத இடைவெளி உள்ளது என்பதால் ஏதாவது ஒரு சிறிய தொடரில் இந்திய அணி விளையாடவும் வாய்ப்புண்டு. இந்நிலையில் இங்கிலாந்துத் தொடரில் பங்கேற்கும் முன்பே இந்திய அணி வீரர்கள் எந்தளவுக்குப் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே. 

ஒரேநேரத்தில் 5 டெஸ்டுகள் என்பதால் ஏன் முதலில் டெஸ்ட் தொடரை ஆரம்பித்திருக்கக்கூடாது என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்தபோது முதலில் டெஸ்ட் தொடர்தானே நடைபெற்றது! இந்த நடைமுறையை ஏன் இந்திய அணி பின்பற்றவில்லை? இங்கிலாந்து அணியின் விடுமுறை குறித்து பேசிய கோலி ஏன் அதேபோன்றதொரு சலுகையை பிசிசிஐயிடம் கோரவில்லை? குறைந்தபட்சம் டெஸ்ட் தொடரை முதலில் ஆரம்பித்திருக்கலாமே!

கொஞ்சம் யோசித்திருந்தால் இந்திய அணிக்குச் சாதகமான அட்டவணையைத் தயாரித்திருக்கலாம். கோலியின் யோசனைகளுக்கு வடிவம் கொடுத்திருக்கலாம். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட அட்டவணை எந்தளவுக்கு இந்திய அணிக்குப் பாதகமாக இருக்கப்போகிறது எனத் தெரியவில்லை. இனி மாற்றுவது சிரமம். எனவே இதற்கு ஏற்றவாறு சரியாகத் திட்டமிடுவது மிக முக்கியம். 5 டெஸ்டுகளிலும் உற்சாகமாகவும் நல்ல உடற்தகுதியுடனும் இந்திய அணியினர் பங்கேற்கவேண்டும். அதற்கேற்ற ஏற்பாடுகள் நடைபெறவேண்டும். இந்தியாவில் டெஸ்ட் தொடரில் மோசமாகத் தோற்றதால் (4-0) இந்திய அணியைப் பழிக்குப் பழி வாங்க இங்கிலாந்து அணி காத்துக்கொண்டிருக்கும். இந்தச் சமயத்தில் நாமே அவர்களுக்குச் சுலபமான வாய்ப்புகளைத் தந்துவிடக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com