2017-ல் தலா இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பகிர்ந்துகொண்ட இணையில்லா ஃபெடரர் & நடால்!

நாங்கள் இருவரும் டென்னிஸின் உலகின் தவிர்க்க முடியாத வீரர்களாக இப்போதும் இருக்கிறோம்...
2017-ல் தலா இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பகிர்ந்துகொண்ட இணையில்லா ஃபெடரர் & நடால்!

2017-ம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீரர்களான ஃபெடரர், நடால் ஆகிய இருவருக்கும் அற்புதமாக அமைந்துவிட்டது. இருவரும் தலா இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இளம் வீரர்களுக்குக் கடுமையான போட்டியை அளித்துள்ளார்கள். ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டனையும் நடால் பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்க ஓபனையும் வென்றுள்ளார்கள்.

மொத்தத்தில் நாங்கள் இருவரும் டென்னிஸின் உலகின் தவிர்க்க முடியாத வீரர்களாக இப்போதும் இருக்கிறோம் என்பதை ஃபெடரரும், நடாலும் நிரூபித்த வருடம் இது.

ஆஸ்திரேலிய ஓபன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். மெல்போர்னில் 3 மணி, 37 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலைத் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 5-ஆவது பட்டத்தைக் கைப்பற்றினார் ஃபெடரர். ஏறக்குறைய நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றார். அதற்கு முன்னர் 2012-ல் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஃபெடரர் பட்டம் வென்றிருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வந்த ஃபெடரர், முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வந்த கையோடு ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடினார். இதன்மூலம் தனது சகாப்தம் முடிந்துவிடவில்லை என்பதை நிரூபித்தார். 

இதுதவிர மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தலா 5 அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஃபெடரர். அவர், விம்பிள்டனில் 8 பட்டங்களையும், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன்களில் தலா 5 பட்டங்களையும் வென்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் ஃபெடரரும் நடாலும் 9 முறை மோதியுள்ளனர். அதில் நடால் 6 முறை வெற்றி கண்டுள்ளார்.


பிரெஞ்சு ஓபன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 10-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் 10 பட்டங்கள் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் நடால் 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை தோற்கடித்தார்.

பிரெஞ்சு ஓபனில் 3-ஆவது முறையாக ஒரு செட்டைக்கூட இழக்காமல் வாகை சூடினார் நடால். இதற்கு முன்னர் 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் ஒரு செட்டைக்கூட இழக்காமல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். பிரெஞ்சு ஓபனில் மட்டும் இதுவரை 81 ஆட்டங்களில் விளையாடியுள்ள நடால், அதில் 79 வெற்றிகளைப் பெற்றுள்ளார். களிமண் தரையில் நடால் வென்ற 53-ஆவது பட்டம் இது. 

பிரெஞ்சு ஓபனில் 2005 முதல் 2008 வரையில் தொடர்ச்சியாக 4 பட்டங்களையும், 2010 முதல் 2014 வரையில் 5 பட்டங்களையும் வென்ற நிலையில், இப்போது 10-ஆவது பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார் நடால்.

விம்பிள்டன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 8-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் விம்பிள்டனில் அதிகமுறை பட்டம் வென்றவர் என்று வரலாற்று சாதனையைப் படைத்தார். 

ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். 

முன்னதாக 7 பட்டங்களுடன் பீட் சாம்ப்ராஸ், வில்லியம் ரென்ஷா ஆகியோருடன் முதலிடத்தைப் பகிர்ந்திருந்த ஃபெடரர், இப்போது அவர்களைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். 

ரோஜர் ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபனில் 5, பிரெஞ்சு ஓபனில் 1, விம்பிள்டனில் 8, அமெரிக்க ஓபனில் 5 என மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர் என்ற சாதனையும் ஃபெடரர் வசமேயுள்ளது.

அமெரிக்க ஓபன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்துக்கான இறுதிச்சுற்றில், ஸ்பெயினின் ரஃபேல் நடால், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நடாலும், உலகின் 32-ஆம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனும் மோதினர். 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நடால் வென்று அமெரிக்க ஓபன் போட்டியின் சாம்பியன் ஆனார். நடாலின் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் இது 16-வது பட்டமாகும். அதேவேளையில், இந்த ஆண்டில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதற்கு முன்பு பிரெஞ்சு ஓபனை வென்றார். மேலும் இது அவருடைய மூன்றாவது அமெரிக்க ஓபன் பட்டமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com