ஆட்டமிழக்காமல் 6 முறை 200: அதிரவைக்கும் தோனியின் புது சாதனை!

ஆட்டமிழக்காமல் 6 முறை வரை 200 ரன்கள் அடித்து தோனி புதிய சாதனைப் படைத்துள்ளார்.
ஆட்டமிழக்காமல் 6 முறை 200: அதிரவைக்கும் தோனியின் புது சாதனை!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் 87 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அப்போது 6-ஆவது வரிசை வீரராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி களமிறங்கினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரமாய் நின்ற தோனி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோருக்கு அடித்தளமிட்டார்.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தும் நோக்கத்தோடு அதிரடி ஆட்டத்திலும் ஈடுபட்டார். மொத்தம் 88 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரி உட்பட 2 இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டு 79 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இந்த இன்னிங்ஸின் மூலம் புதிய சாதனையைப் படைத்தார் தோனி. அதாவது, வரிசையாக நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் 200 ரன்களுக்கு மேல் குவித்தார். 

இதுபோன்று ஆட்டமிழக்காமல் 6 முறை 200 ரன்களுக்கு மேல் கடந்து அதிகமுறை ஆட்டமிழக்காமல் இத்தனை ரன்களைக் குவித்து புதிய உலக சாதனைப் படைத்தார். மேலும், சர்வதேசப் போட்டிகளில் 100 அரைசதங்கள் கண்ட 4-ஆவது இந்தியர் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

இவை அனைத்தும் அவருக்கு மிக நெருக்கமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ரோஹித் சர்மா உள்ளார். இவர், ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 200 ரன்களுக்கும் மேல் 5 முறைக் கடந்துள்ளார். அவற்றில் 2 இரட்டைச் சதங்கள் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com