ஹார்திக் பாண்டியா: இந்தியாவின் பென் ஸ்டோக்ஸ்?

இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ், இந்திய அணிக்கு ஹார்திக் பாண்டியா. கோலி இந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியபோது...
ஹார்திக் பாண்டியா: இந்தியாவின் பென் ஸ்டோக்ஸ்?

இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ், இந்திய அணிக்கு ஹார்திக் பாண்டியா.

கோலி இந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியபோது உடனடியாக விமரிசனங்கள் எழுந்தன. ஸ்டோக்ஸ் எங்கே, பாண்டியா எங்கே? இருவரையும் ஒரே தராசில் வைக்கலாமா? அந்தளவுக்குத் தகுதியானவர் அல்லர், பாண்டியா. ஜடேஜா போல ஒரு சுமாரான ஆல்ரவுண்டராக மட்டுமே என்று கருத்துகள் எழுந்தன. 

இதுதவிர, தோனி அணியை விட்டு நீக்கப்பட வேண்டும் என்று விமரிசனங்கள் எழுந்தபோதெல்லாம் அடுத்து எழுந்த கேள்வி. சரி, தோனி வேண்டாம் என்றால் ஒருநாள் போட்டிகளில் கடைசி 10, 15 ஓவர்களில் யார் அதிரடி ஆட்டம் ஆடுவார்? அப்படியொரு வீரர் இந்தியாவில் உண்டா? 

இந்தக் கேள்விகளுக்கு இன்று இடமில்லை. கிரிக்கெட் உலகின் முக்கியப் புள்ளியாக அறியப்படுகிறார் 23 வயது பாண்டியா. எதிரணி வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் இவரைப் பற்றி விவாதிக்காமல் முடியாது. ஸ்டோக்ஸுக்கு இணையாகப் பேசப்படும் பாண்டியா, கடைசி ஓவர்களில் தோனிக்குச் சரியான இணையாகவும் விளங்குகிறார். இந்திய கிரிக்கெட்டின் எல்லாக் குழப்பங்களும் ஒரே நாளில் தீர்ந்ததுபோல ஒரு தோற்றம். 

2015 ஐபிஎல் மூலமாக கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமான ஹார்திக் பாண்டியா, அடுத்தச் சில மாதங்களில் இந்திய அணியில் இடம்பிடித்தார். மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா, கொல்கத்தாவுக்கு எதிராக 31 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின்னர் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி டி20 போட்டியில் பரோடா அணிக்காக விளையாடி 377 ரன்கள் குவித்து கவனம் ஈர்த்தார். 10 விக்கெட்டுகள் எடுத்து அந்த அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறவும் உதவினார். இதையடுத்து இந்திய அணியில் இடம்பிடித்து கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தார். டி20 போட்டியில் அறிமுகமானார்.

ஐபிஎல் வீரர், பரோடா வீரர் என்றிருந்தவர் ஒரே நாளில் இந்திய அணி வீரரானார். வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து பாண்டியா அப்போது கூறியதாவது: : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் எனது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. ஏனெனில் ஓர் ஆண்டுக்கு முன்பு என்னை யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது நான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதும், மும்பை அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடுகிறேன் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஓர் ஆண்டில் எனது வாழ்க்கையே மாறிவிட்டது என்றார். காலிஸ், தென் ஆப்பிரிக்காவுக்காக செய்த சாதனைகளும், பங்களிப்பும் பாராட்டுக்குரியவை. அவர் பந்துவீசும்போது மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர், பேட்டிங் செய்யும்போது மிகச்சிறந்த பேட்ஸ்மேன், பீல்டிங் செய்யும்போது சிறந்த பீல்டர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் அவர் என்னுடைய ரோல் மாடல். ஏனெனில் நான் இந்தியாவின் காலிஸாக இருக்க விரும்புகிறேன். அதுபோன்ற ஒரு வீரர்தான் அணிக்கு தேவை. அப்படிப்பட்ட ஒரு வீரராகவே இந்திய அணியில் இருக்க விரும்புகிறேன் என்றார். 

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்குப் பிறகு  ஆசிய கோப்பை டி20 போட்டிக்கும் தேர்வானார் பாண்டியா. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. 17.3 ஓவர்களில் 83 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான். இந்தியத் தரப்பில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி கூறியதாவது: பாண்டியா டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசுவதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. அவருடைய வருகையால் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள் என இந்திய அணியின் பந்துவீச்சு வலுவடைந்துள்ளது. அணியில் எல்லா விஷயங்களும் சரியாக இருக்கும்போது வீரர்களை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. 7 பேட்ஸ்மேன்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என அனைவரும் நினைக்கலாம். ஆனால் பாண்டியா போன்ற ஒரு வீரர் இருக்கும்போது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இல்லாவிட்டால் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது? அவர் களமிறங்கினால் கூடுதலாக 15 ரன்களைச் சேர்த்துவிடுகிறார். 160 ரன்கள் எடுத்தால் அது நல்ல ஸ்கோராக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் ஆடுகளத்தில் 165 முதல் 175 ரன்கள் வரை குவிப்பதற்கு பாண்டியா உதவுவார். அவரைப் போன்ற ஒரு வீரர்தான் அணிக்கு வேண்டும் என்று விரும்பினோம். அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் பெற்றவர். எப்படி அதிரடியாக ஆட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அதை அவர் செய்தார். அவர் பந்தை எல்லைக் கோட்டுக்கு விரட்ட விரும்புபவர். அவர் இன்னும் நிறைய ஆட்டங்களில் ஆடும்போது சிறந்த வீரராக உருவெடுப்பார். முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவது கடினமானதாகும். ஆனால் அந்தத் திறமை பாண்டியாவிடம் இருக்கிறது என்றார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தச் சில மாதங்களில் இப்படியொரு பாராட்டுச் சான்றிதழ், தோனியிடமிருந்து.

தோனியின் பாராட்டு குறித்து பாண்டியாவிடம் கேட்டபோது அவர் இவ்வாறு சொன்னார்: அதிரடியாக ஆடும் ஆற்றல் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இளம் வயதில் இருந்தே பிரமாண்ட சிக்ஸர்களை விளாசுவது எனது பழக்கமாகிவிட்டது. எந்தப் போட்டியாக இருந்தாலும், அதில் சிக்ஸர்களை விரட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பேன் என்றார்.

இதனால் இந்தியாவில் நடைபெற்ற 2016 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்தார். வங்கதேசத்துக்கு எதிராக கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்கிற நிலைமை இருந்தபோது அற்புதமாகப் பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவினார். மறக்கமுடியாத தருணங்கள் இவை.

டி20க்கு ஏற்ற வீரராக பாண்டியா இருந்தாலும் அதில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை. இதுவரை 19 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டியா 100 ரன்கள் எடுத்து 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக 31 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச டி20 ரன்கள். அதே ஆசிய கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் எடுத்ததுதான் டி20 போட்டியில் அவருடைய சிறப்பான பங்களிப்பு. 

ஆனால் 2016 ஐபிஎல்-லில் பாண்டியா சரியாக விளையாடாததால் அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறிய சறுக்கல் ஏற்பட்டது. ஜிம்பாப்வே-வில் இந்திய அணி ஆடிய 3 ஒருநாள் 2 டி20 போட்டிகளுக்கு அவர் தேர்வாகவில்லை. எனினும் பாண்டியாவை ஒரேடியாக இந்தியத் தேர்வுக்குழு மறக்கவில்லை. அடுத்தடுத்து அவருக்குப் பெரிய வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது.

2016-ல், வருடக்கடைசியில் சாதகமான விஷயங்கள் நடைபெற்றன. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்குத் தேர்வாகி முதல்முறையாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். 16 டி20 போட்டிகளில் பாண்டியா ஆடியபிறகு இந்திய அணி அவர்மீது திருப்தி கொண்டு இந்த வாய்ப்பை அளித்தது. அடுத்தச் சில மாதங்களில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம்பிடித்தார். டி20 ஸ்பெஷலிஸ்டாக அறியப்பட்ட பாண்டியா, டெஸ்ட் வீரர் ஆனார். 

டெஸ்ட் போட்டிக்கு பாண்டியாவா என்று பலமுனைகளில் இருந்தும் கேள்விகள் எழுந்தன. பாண்டியாவைத் தேர்வு செய்தது ஏன் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் கூறியதாவது: 

ஹார்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் திறமை, ராகுல் திராவிடிடம் பயிற்சி பெற்ற பிறகு அவருடைய அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் ஆகியவற்றைக் கொண்டே அவரை அணியில் சேர்த்திருக்கிறோம். அவர் பெரிய அளவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவருடைய ஃபார்மை கணக்கில் கொண்டு விவாதித்தபோது சரியான ஆல்ரவுண்டரை அடையாளம் காண வேண்டும் என்பதை தேர்வுக்குழுவினர் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். நம்முடைய அணியில் உள்ள தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் பாண்டியாவும் ஒருவர். ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய "ஏ' அணிக்காக விளையாடிய பிறகு பாண்டியாவின் பந்துவீச்சில் வேகம் அதிகரித்துள்ளது. அவரால் இப்போது நன்றாக பந்தை சுழற்ற முடிகிறது. பேட்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியத் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டார். பெளலர், பேட்ஸ்மேன், பீல்டர் என அனைவருக்கும் நிகராக செயல்படக்கூடிய ஒரு ஆல்ரவுண்டர் பாண்டியா. இந்திய அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டரை தேடிக்கொண்டிருக்கிறோம். ஜூனியர் அணியின் பயிற்சியாளரான ராகுல் திராவிடும் அதை மனதில் வைத்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தற்போதைய நிலையில் ஸ்டூவர்ட் பின்னியோடு ஒப்பிடும்போது பேட்டிங், பெளலிங் என அனைத்திலும் பாண்டியா சிறந்த வீரர் ஆவார் என்றார். தன் மீது இந்திய கிரிக்கெட்டின் முக்கியத் தூண்கள் வைத்துள்ள நம்பிக்கை, பாண்டியாவை மேலும் தன்னம்பிக்கை பெற்ற வீரராக மாற்றியது.

நியூசிலாந்துக்கு எதிரான தர்மசாலாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுகமான பாண்டியா, முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்தப் போட்டியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங்கில் கிடைத்த முதல் வாய்ப்பில் 36 ரன்கள் எடுத்தார். தனது 7-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அரை சதம் எடுத்தார். 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்வானாலும் சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அறிமுகமானார் பாண்டியா. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரை சதம் எடுத்தார். பிறகு 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 96 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் குவித்தார். டி20 வீரர் என்று ஐபிஎல் மூலமாக அறியப்பட்டவர், முதல் தொடரிலே டெஸ்ட் சதம் எடுத்தார். 

86 பந்துகளில் சதம். புஷ்பகுமாரா வீசிய 116-வது ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் கிடைத்தன. இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற பெருமை பாண்டியா வசமானது. சர்வதேச அளவில் பிரையன் லாரா, ஜார்ஜ் பெய்லி ஆகியோர் ஒரு ஓவரில் 28 ரன்கள் குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக அப்ரிதி 27 ரன்கள் எடுத்துள்ளார்.

இரண்டாவது நாளின் முதல் செஷனில் பாண்டியா 107 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக 100 ரன்கள் குவித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் பாண்டியா. இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்ததால், முதல் செஷன் கூடுதலாக 30 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் அதிவேக சதமடித்த இந்தியர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் பாண்டியா. வீரேந்திர சேவாக் (78 பந்துகளில் சதம்) முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் போட்டியில் 7 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்தியர்கள் வரிசையில் சேவாக், ஹர்பஜன் ஆகியோருடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார் பாண்டியா. டெஸ்டிலும் திறமையை நிரூபித்ததால் இந்திய அணியின் நீண்டநாள் ஆல்ரவுண்டர் தேடல் ஒரு முடிவுக்கு வந்தது என்றும் சொல்லலாம்.

பாண்டியாவுக்கு முன்பு இந்திய அணி கர்நாடகாவைச் சேர்ந்த பின்னிக்கு நிறைய வாய்ப்பளித்தது. ஆனால் கிடைத்த வாய்ப்புகளை அவரால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்திய அணி எதிர்பார்த்த ஆல்ரவுண்டராக அவர் இல்லாததால் அந்த வாய்ப்பு பாண்டியா வசம் சென்றது. கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபித்தார் பாண்டியா. இன்று கோலியின் முழு ஆதரவையும் பெற்றுள்ளார்.  

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி பாண்டியாவுக்கு மேலும் திருப்புமுனையாக அமைந்தது. இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்திய முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஏமாற்றமளிக்க இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது பாண்டியாவின் பேட்டிங்தான். ஷதாப் கான் வீசிய 23-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய பாண்டியா, 32 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் ஆட்டத்தில் பாண்டியா திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்கிற நம்பிக்கையை இந்திய ரசிகர்கள் பெற்றார்கள். தொடர்ந்து வேகம் காட்டிய அவர், ஃபகார் ஸமான் பந்துவீச்சில் 2 சிக்ஸர்களை விளாச, 26 ஓவர்களில் 152 ரன்களை எட்டியது இந்தியா. ஆனால் ஹசன் அலி வீசிய அடுத்த ஓவரில் பாண்டியாவை தேவையில்லாமல் ரன் அவுட்டாக்கினார் ஜடேஜா. இதனால் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்த பாண்டியா ஏமாற்றத்தோடு வெளியேறினார். இந்திய ரசிகர்களால் மறக்கமுடியாத ஓர் ஆட்டம் இது. 

அடுத்ததாக நேற்றைய சென்னை ஒருநாள் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து இந்திய ரசிகர்களிடம் மேலும் நம்பிக்கை பெற்றுள்ளார். 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்தார். பாண்டியா-தோனி ஜோடி118 ரன்கள் குவித்தது.

தோனி-பாண்டியா ஜோடி 19.2 ஓவர்களில் 118 ரன்கள் குவித்தது. இந்தியா 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஜோடி சேர்ந்த பாண்டியாவும், தோனியும், இந்தியா 206 ரன்களை எட்டியபோதுதான் பிரிந்தனர். இந்த ஆட்டத்தில் பாண்டியா சந்தித்த கடைசி 21 பந்துகளில் அவருடைய சராசரி 228.57. ஆடம் ஸம்பா வீசிய 37-வது ஓவரில் 5 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார் பாண்டியா. பிறகு பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சென்னை ஒருநாள் போட்டி அவருக்கு என்றென்றும் மறக்காது.

இந்த ஆண்டில் சர்வதேசப் போட்டியில் 4-வது முறையாக ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசியுள்ளார் பாண்டியா. இதற்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இரு முறை ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட பாண்டியா, கடந்த மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இப்போது சென்னையில் ஸம்பா பந்துவீச்சில் இன்னொருமுறை ஹாட்ரிக் சிக்ஸர்கள். லாங் ஆன், லாங் ஆஃப் பகுதிகளை உடைய ‘வி’ பகுதியில் சிக்ஸ் அடிப்பதுதான் பாண்டியாவின் தனித்துவம். எப்படிப் பந்துவீசினாலும் அந்தப் பகுதியில் சிக்ஸ் அடிக்கவே விருப்பப்படுவார்.

தோனி, கோலி, ரோஹித் சர்மா, தவன் வரிசையில் பாண்டியாவும் இந்திய ஒருநாள் அணியில் தவிர்க்கமுடியாத வீரராகியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, சென்னைப் போட்டி என இரு சமயங்களில் இக்கட்டான நிலைமையிலும் அசாத்தியமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால்தான் அவரை விட்டுக்கொடுக்காமல் எல்லாப் பேட்டிகளிலும் பேசுவார் கோலி. அவர் விரும்பும் ஆக்ரோஷத்தன்மை பாண்டியாவிடம் வெளிப்படுவதால் மிகுந்த மதிப்பு வைத்துப் பேசுவார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 26 வயது பென் ஸ்டோக்ஸ் இதுவரை 39 டெஸ்ட் (பாண்டியா - 3), 59 ஒருநாள் (பாண்டியா - 22), 21 டி20 (பாண்டியா - 19) போட்டிகளில் விளையாடி தன்னிகரற்ற ஆல்ரவுண்டராக உள்ளார். டெஸ்ட் போட்டியில் 6 சதமும் 12 அரை சதங்களும் எடுத்துள்ளார். 95 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3 சதம், 9 அரை சதம். 50 விக்கெட்டுகள்.

ஸ்டோக்ஸ் சாதனை வீரர் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அவர் ஓடிய தூரத்தில் பாதி கடந்துள்ளார் பாண்டியா. ஸ்டோக்ஸை விடவும் 3 வயது குறைவு வேறு. பேட்டிங்கில் கிடைத்த வாய்ப்புகளும் அதிகமில்லை. ஆனால் நாளுக்கு நாள் தெரிகிற முன்னேற்றங்கள், அதிகரிக்கும் பங்களிப்புச் சதவிகிதம் என பாண்டியாவின் திறமை ஸ்டோக்ஸுக்கு ஓரளவு ஈடு கொடுக்கும் விதத்தில் உள்ளது. இன்னும் இரு வருடங்களுக்குப் பிறகு ஸ்டோக்ஸுடன் இணைத்து ஒப்பிட்டுப் பார்ப்பதே பாண்டியாவுக்குச் செய்கிற நியாயமாக இருக்கும். ஸ்டோக்ஸ் சாதித்துக் காண்பித்து மேலும் பல சாதனைகளை நோக்கிச் செல்பவர். பாண்டியா, வளந்து வருகிற ஆல்ரவுண்டர். இன்னும் செல்லவேண்டிய தூரம் நிறைய உள்ளது.  

இந்திய அணி இத்தனை நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆல்ரவுண்டர் இவர்தான். எதிர்பார்ப்புக்கு மேலாகப் பங்களிப்பு செலுத்தி இந்திய ரசிகர்களுக்குப் பெரிய நம்பிக்கை அளித்துள்ளார் பாண்டியா. அந்த ‘வி’ பகுதி சிக்ஸர்கள் மேலும் தொடரட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com