ஐபிஎல் 2018 முதல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 2018 முதல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு

2018-ம் ஆண்டு 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை மொத்தம் 51 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் போட்டியும், மே 27-ந் தேதி இறுதிப்போட்டியும் மும்பையில் நடைபெறுகிறது. 

ஏப்ரல் 7-ந் தேதி (இன்று) நடைபெறவுள்ள முதல் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பின்னர் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மோதுகிறது. இதில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி, 2-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12.5 கோடி, 3-ஆவது மற்றும் 4-ஆவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசன் முதல் கள நடுவர் தீர்ப்பை எதிர்த்து 3-ஆவது நடுவரிடம் மேல் முறையீடு செய்யும் டிஆர்எஸ் முறை முதன்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இந்த தொடரின் மத்தியில் 2 அல்லது குறைவான போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களை இதர அணிக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

துவக்க விழா மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை மாலை கோலாகலமாகத் துவங்கியது. இதில் நடிகர்கள் பிரபு தேவா, ஹிருத்திக் ரோஷன், வருண் தவான் உள்ளிட்டோரின் நடனங்கள் இடம்பெற்றன. அதுபோல நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் மற்றும் தமன்னா ஆகியோர் நடனங்களால் அரங்கை அலங்கரித்தனர். பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடகர் மிகா சிங் பங்கேற்று ரசிகர்களை குதூகலித்தார்.

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 22 முறை மோதியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் 12 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 10 முறையும் வெற்றிபெற்றுள்ளன. வான்கடே மைதானத்தில் நடந்த 7 போட்டிகளில் மும்பை 5 முறையும், சென்னை 2 முறையும் வென்றுள்ளன. அதுபோல இவ்விரு அணிகளும் சந்தித்த கடந்த 3 போட்டிகளிலும் மும்பை வெற்றிவாகை சூடியுள்ளது. 

டி20 போட்டிகளில் 239 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக மகேந்திர சிங் தோனி உள்ளார். மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இதுவரை தலா 159 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளனர். 

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இரு அணி வீரர்கள் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், மார்க் உட்.

மும்பை இந்தியன்ஸ்:

இவன் லீவிஸ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹார்திக் பாண்டியா, கீய்ரன் பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ், க்ருணால் பாண்டியா, மயங்க் மார்கண்டே, மிட்செல் மெக்லனேகன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், ஜஸ்ப்ரித் பும்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com