காவிரி பிரச்னைக்கும் ஐபிஎல் போட்டிக்கும் என்ன தொடர்பு?: ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கேள்வி!

காவிரி பிரச்னைக்காக ஏன் ஐபிஎல் போட்டிக்குக் கெடுதல் செய்கிறீர்கள்? இது அரசு நடத்தும் நிகழ்ச்சி அல்ல...
காவிரி பிரச்னைக்கும் ஐபிஎல் போட்டிக்கும் என்ன தொடர்பு?: ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கேள்வி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகின்றன. பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் தொடக்க விழா நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் துவக்க ஆட்டத்தில் மோதுகின்றன.

சூதாட்டப் புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தடை முடிவடைந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி மீண்டும் களம் காண்கிறது.

எனினும் தமிழகத்தில் நிலவும் காவிரி பிரச்னையை முன்னிட்டு ஐபிஎல் போட்டியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. சென்னையில் ஐபிஎல் போட்டிகளும் நடைபெறக்கூடாது என்கிற கோரிக்கைகளும் அதிகமாகி வருகின்றன.

காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் வியாழக்கிழமை தெரிவித்தார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை தடை செய்ய வேண்டும். ஐபிஎல் போட்டிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறம் தள்ளினால், மைதானத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் காவிரி பிரச்னை தீர, சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தைப் புறக்கணியுங்கள் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் கூறியதாவது: சிஎஸ்கேவின் முதல் ஆட்டம் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. 50,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானம் காலியாக இருந்தால் அது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும். உலகளவில் தொலைக்காட்சியில் அதைப் பார்ப்பார்கள். ஒரு ரூபாய் செலவழிக்காமல் இதைச் செய்துகாட்ட முடியும். சிறு தியாகத்தின் வழியாக. ஒரே ஒரு ஆட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். அந்த ஆட்டத்தை வீட்டில் பாருங்கள். 50,000 பேரின் தியாகம் 7 கோடி மக்களுக்கு வாழ்நாள் முழுக்க உதவும் என்று கூறியுள்ளார்.

காவிரி உரிமை போராட்டத்தை ஐபிஎல் போட்டி திசை திருப்பிவிடக் கூடாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி என்பது ஒரு கொண்டாட்டம். கொண்டாடுகின்ற மனநிலையில் தமிழர்கள் இல்லை. அதை இந்த உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. உடனடியாக ஐபிஎல் போட்டிகளை இப்போது நடத்த முடியாது என்று தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நடக்கின்ற காவிரி உரிமை போராட்டத்தை ஐபிஎல் போட்டி திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் போகலாம். இப்படிப்பட்ட நிலைப்பாடுகளை தவிர்க்க தமிழக அரசு வரும் 10-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கின்ற ஐபிஎல் போட்டியை நடத்த விடக்கூடாது. இதேபோல ஒரு சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியை சேப்பாக்க மைதானத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐபிஎல் போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டிடிவி தினகரனும் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதற்கு இணையான அமைப்பை உருவாக்கும்வரை இந்த வருடம் எந்தவொரு ஐபிஎல் ஆட்டத்தையும் நேரில் சென்று பார்க்க மாட்டேன். அதேபோல ஐபிஎல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டேன். வாழ்க்கையில் சில விஷங்கள் ஒரு விளையாட்டுப் போட்டியை விடவும் பெரிதானவை. நம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க இது சரியான தருணம் என்று எண்ணுகிறேன் என்று அரசியல் விமரிசகர் சுமந்த் ராமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் காவிரிக்கான போராட்டங்கள் திசை திருப்பப்படுவதாக கூறப்படுகிறதே என்கிற கேள்விக்கு, எங்களைப் பொறுத்தவரையில் அதை நடத்தக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. போட்டிகளை ஏற்பாடு செய்திருப்பவர்கள், மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு மைதானத்துக்கு மாற்றும் திட்டம் உள்ளதா என்கிற கேள்விக்கு ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா, இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

காவிரி பிரச்னையுடன் ஐபிஎல் போட்டி எவ்விதத்தில் தொடர்புடையது? காவிரி பிரச்னை சுமூகமாகத் தீர்வு காணப்படவேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அந்தப் பிரச்னைக்காக ஏன் ஐபிஎல் போட்டிக்குக் கெடுதல் செய்கிறீர்கள்? இது அரசு நடத்தும் நிகழ்ச்சி அல்ல. இது பிசிசிஐ நடத்தும் போட்டி. ஒவ்வொருமுறையும் ஒரு பிரச்னை உருவாகும்போது ஐபிஎல் போட்டி அதனால் பாதிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com