சேப்பாக்கம் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு: மொபைல், கொடிகளுக்கு தடை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு: மொபைல், கொடிகளுக்கு தடை

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி பல்வேறு தரப்பில் இருந்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சில அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் மைதானத்துக்குள் சென்று தங்கள் கோரிக்கைகளை கோஷங்களாக முன்வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடப் போவதாகவும், தமிழகத்தில் தமிழர்களின் உணர்வுகளை திசை திருப்பும் முயற்சிதான் ஐபிஎல் போட்டி என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் மைதானத்துக்கு உள்ளே சென்று கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தவேண்டாம் என்று பேச தமிழக அரசும் மறுக்கிறது. காவிரிக்கான போராட்டத்தை அணைப்பதற்காக திட்டமிட்டு ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்கிறது என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா குற்றம்சாட்டினார். மேலும், ஐபிஎல் டிக்கெட்டுகளை கிழித்தெறிய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

ஐபிஎல் போட்டியில் விளையாட சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியை ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், திட்டமிட்டப்படி சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது. இசைக்கருவிகள், கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள், பேனர்கள், கொடிகள், பதாகைகளை, மொபைல் ஃபோன்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஏப்ரல் 10-ஆம் தேதி) நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்துள்ளனர். மேலும் மைதானம் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு கருதி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com