லெக் ஸ்பின் வீசும் அஸ்வின்: சச்சின் டெண்டுல்கர் ஆதரவு!

இரண்டு அல்லது மூன்று மொழிகள் தெரிந்துவைத்திருப்பது போல லெக் ஸ்பின் பந்துவீச்சில் ஈடுபடுவது கூடுதல் பலத்தையே அளிக்கும்...
லெக் ஸ்பின் வீசும் அஸ்வின்: சச்சின் டெண்டுல்கர் ஆதரவு!

பஞ்சாப் ஐபிஎல் அணியின் கேப்டன் அஸ்வின், சமீபகாலமாக லெக் ஸ்பின் பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறார். இதற்கு விமரிசனங்கள் எழுந்துள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கர் இதுபோன்ற ஒரு முயற்சிக்குத் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

யார் பெயரையும் குறிப்பிடாமல், ஆஃப் ஸ்பின்னர்கள் லெக் ஸ்பின் பந்துவீச்சிலும் ஈடுபடுவது குறித்து சச்சின் கூறியதாவது:

ஒரு ஆஃப் ஸ்பின்னர், லெக் ஸ்பின் பந்துவீச்சில் ஈடுபடுவது அவருக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும் என்றுதான் எண்ணுகிறேன். இரண்டு அல்லது மூன்று மொழிகள் தெரிந்துவைத்திருப்பது போல. பல மொழிகள் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது. 

அதேபோல பந்துவீச்சிலும் பல வகையான அணுகுமுறைகளைக் கையாள்வது தவறில்லை. ஆஃப் ஸ்பின்னர்களால் லெக் ஸ்பின் வீசமுடியாது என்று கூறுவதும் தவறு. அவருடைய ஆயுதங்களில் ஒன்றாக அது இருக்கப்போகிறது. அவ்வளவுதான். ஆஃப் ஸ்பின்னருக்கு தூஸ்ரா எவ்வளவு பலத்தைக் கொடுக்குமோ அதேபோல லெக் பிரேக்கும் மிகவும் பயனளிக்கும். அதை அவருடைய பலவீனமாக எண்ணாமல் பலமாக எண்ணவேண்டும். நான் ஆஃப் ஸ்பின், லெக் பிரேக் என இருவகைப் பந்துவீச்சுகளிலும் ஈடுபட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக ஆஃப் ஸ்பின்னர்களை விடவும் லெக் ஸ்பின்னர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஒருநாள் போட்டிகளில் அதன் முதன்மைத் தேர்வாக இருப்பவர்கள் - லெக் ஸ்பின் உள்ளிட்ட மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள். இதனால்தான் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆரம்பித்து சாஹல், குல்தீப் யாதவ் போன்ற மணிக்கட்டைப் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் பெளலர்களுக்குத்தான் இந்திய அணி நிறைய வாய்ப்புகளை அளித்து வருகிறது. இதனால் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பது சிரமமாக உள்ளது. ஆஃப் ஸ்பின்னராக இருந்தாலும் பல்வேறு வகையான பந்துவீச்சில் ஆர்வம் செலுத்தும் அஸ்வின், தற்போது லெக் ஸ்பின் முறையில் பந்துவீசுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லெக் ஸ்பின்னர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சமீபத்தில் கூறினார். அஸ்வின் போன்ற வெற்றிகரமான ஆஃப் ஸ்பின்னர்கள் கூட, லெக் ஸ்பின் பந்துவீச முயற்சிக்கின்றனர். இதன்மூலமாக லெக் ஸ்பின்னர்களின் முக்கியத்துவம் தெரியவருகிறது. அவர்கள் வெற்றிகரமாக இருப்பதற்கு சரியாகக் காரணம் கூற இயலவில்லை. ஆனால், அவர்கள் நிச்சயம் விக்கெட் எடுக்கின்றனர். அவர்களைக் கணிப்பது அவ்வளவு எளிதல்ல. லெக் ஸ்பின்னர் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் அது அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்று கபில் பேட்டியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com