2000-க்கு பிறகு இந்திய துவக்க ஜோடியின் 'அடடே' சாதனை!

 முரளி விஜய், ஷிகர் தவன் துவக்க ஜோடி தலா 20, 26 ரன்களுடன் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. 
2000-க்கு பிறகு இந்திய துவக்க ஜோடியின் 'அடடே' சாதனை!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பார்மிங்ஹாமில் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 2-ஆம் நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 9, துணைக் கேப்டன் ரஹானே 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

இதில் முரளி விஜய், ஷிகர் தவன் துவக்க ஜோடி தலா 20, 26 ரன்களுடன் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் அந்நிய ஆடுகளங்களில் இந்த ஜோடி 3-ஆவது முறையாக முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்துள்ளது. முன்னதாக 2014-ல் பிரிஸ்பேன், அதே ஆண்டில் மெல்போர்ன் மற்றும் தற்போது பார்மிங்ஹாம் மைதானங்களில் எடுத்துள்ளனர். மொத்தம் 24-ஆவது முறையாக 50+ ரன்களை இந்த ஜோடி எடுத்துள்ளது. 

இந்நிலையில், 2000-ம் ஆண்டுக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய துவக்க ஜோடி 10 ஓவர்களைக் கடந்து பேட்டிங் செய்தது இது 3-ஆவது முறையாகும்.

இந்த டெஸ்டில் விஜய், தவன் ஜோடி 13.4 ஓவர்கள் களத்தில் நின்றுள்ளது. முன்னதாக, 2003-ல் பிரிஸ்பேனில் சேவாக், சோப்ரா ஜோடி 19.2 ஓவர்களும், 2011-ல் லார்ட்ஸில் கம்பீர், முகுந்த் ஜோடி 18.2 ஓவர்களும் களத்தில் நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com