அன்று அடிலெய்ட், இன்று எட்ஜ்பாஸ்டன்: 4 ஆண்டுகளாகியும் கோலியை விடாத சோகம்

2014-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்டில் கோலிக்கு நிகழ்ந்த சோகம் தற்போது இங்கிலாந்துடனான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டிலும் நிகழ்ந்துள்ளது.
அன்று அடிலெய்ட், இன்று எட்ஜ்பாஸ்டன்: 4 ஆண்டுகளாகியும் கோலியை விடாத சோகம்

2014-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்டில் கோலிக்கு நிகழ்ந்த சோகம் தற்போது இங்கிலாந்துடனான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டிலும் நிகழ்ந்துள்ளது. 

இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் அசத்தல் சதமும், 2-ஆவது இன்னிங்ஸில் அடித்த அரைசதமும் பலன் அளிக்காமல் போனது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை இது கோலிக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டியாகவே மாறிவிட்டது. 

இந்திய அணியின் சார்பாக அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் பட்டியலில் கோலி 200 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 2-ஆவது இடத்தில் வெறும் 53 ரன்களுடன் பாண்டியா உள்ளார். இது கோலிக்கும், இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி என்ற கூற்றை இந்த புள்ளி விவரம் ஊர்ஜிதப்படுத்துகிறது. 

கோலி குவித்த ரன்களுக்கும் மற்ற பேட்ஸ்மேன்கள் குவித்த ரன்களுக்கும் இடையிலான வித்தியாசம் தான் இந்த போட்டியை இங்கிலாந்துக்கு சாதகமாக மாற்றியுள்ளது. இப்படி, கோலி மிகக் கடுமையாக போராடி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைவது கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் புதிதல்ல. 

ஆஸ்திரேலியாவுடனான அடிலெய்ட் டெஸ்ட் 2014: 

2014-இல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் முதல் டெஸ்டில் அப்போதைய கேப்டன் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால், அடிலெய்ட் டெஸ்டில் விராட் கோலி முதன்முதலாக கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தினார். 

அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 517 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 517 ரன்கள் என்ற இமாலய ரன்களை விட முன்னிலை பெறும் முனைப்பில் இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். அந்த இன்னிங்ஸில் விஜய், புஜாரா மற்றும் ரஹானே அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தனர். ஆனால், 517 ரன்கள் என்ற இமாலய ரன்களை ஆஸ்திரேலியா குவித்திருந்ததால் இந்திய அணியின் இன்னிங்ஸில் சதம் தேவைப்பட்டது. 

அதை பூர்த்தி செய்யும் வகையில் கேப்டன் விராட் கோலி மட்டும் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். அவர், 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 444 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கோலியின் அந்த சதத்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ரன்களை ஓரளவு நெருங்க முடிந்தது. 

2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா 290 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 364 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயித்தது.  

364 ரன்கள் என்ற இமாலய இலக்கு என்றாலும் கோலியின் படை நேர்மறையுடன் இலக்கை நோக்கி விளையாடியது. அந்த இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து முதலில் தடுமாற்றம் கண்டாலும் விஜய் - கோலி ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டியது. 
 
முதல் இன்னிங்ஸை போல் 2-ஆவது இன்னிங்ஸிலும் கோலி அசத்தலான சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால், மறுமுனையில் விஜய் 99 ரன்கள் எடுத்து துரதிருஷ்டவசமாக சதம் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தார். விஜய் ஆட்டமிழந்தவுடன் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல் சரியத் தொடங்கியது. 

இதனால், மொத்த நெருக்கடியும் கோலியின் மீது விழுந்தது. கோலி தனிஒருவனாக போராடி இந்திய அணியை வெற்றி இலக்குக்கு அருகே கொண்டு சென்றார். அதன்படி வெற்றி இலக்கையும் கோலி அடையச் செய்வார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருந்தனர். 

இந்திய அணியின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலையில் 141 ரன்கள் எடுத்திருந்த கோலி லயான் பந்தில் 7-ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அந்த ஒரு விக்கெட் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த சமயத்திலும் நினைவில் இருந்து மறக்காது. அப்படிபட்ட விக்கெட்டாக அது அமைந்தது. அதன் விளைவாக இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

அந்த போட்டியில் கோலிக்கு மற்ற பேட்ஸ்மேன்கள் ஓரளவு உதவியிருந்தாலே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். அந்த வெற்றி நிச்சயம் வரலாறு ஆகி இருக்கும். ஆனால், கோலிக்கு அது சாதகமாக அமையவில்லை. கோலியின் போராட்டம் வருந்தத்தக்க வகையில் வீணாய் போனது. 

இங்கிலாந்துடனான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் 2018:

இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் அரைசதம் கூட அடித்ததில்லை என்ற மோசமான வரலாற்றுடன் இந்த தொடரில் கோலி களமிறங்கினார். மேலும், நம்பர் -1 அணி என்பதால் உள்நாட்டில் பெற்று வந்த தொடர்ச்சியான வெற்றிகளை அந்நிய மண்ணிலும் தொடர வேண்டும் என்ற நெருக்கடியும் கோலிக்கு கூடுதலாக இருந்தது. 

முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. 

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 

இதனால், முதல் இன்னிங்ஸில் இந்தியா 187 ரன்களையாவது எடுக்குமா என்ற கேள்வி எழுந்தது. காரணம், 187 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்தை விட பின்தங்கி இருக்கும் ரன்கள் 100-க்கும் குறைவாக இருக்கும். அதன்மூலம், 2-ஆவது இன்னிங்ஸில் ஓரளவு போராடுவதற்கான வாய்ப்பாவது இந்திய அணிக்கு கிடைக்கும் என்ற வியூகம் தான்.  

இருப்பினும், கேப்டன் விராட் கோலி பந்துவீச்சாளர்களை மட்டும் களத்தில் வைத்துக்கொண்டே ஒவ்வொரு ஓவரின் கடைசி பந்திலும் 1 ரன் எடுத்து அடுத்த ஓவருக்கு ஸ்டிரைக்குக்கு வந்து ரன்களை சேர்த்து வந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அரைசதம் கூட அடிக்காத இன்னிங்ஸில் கோலி சதம் அடித்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கினார். 
 
கோலியின் இந்த போராட்டமான சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலையை எட்டியது. அபாரமாக விளையாடி சதம் அடித்து 149 ரன்கள் குவித்த கோலி கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 13 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலை என்பது போட்டியில் வெற்றி பெறுவதற்கான அரிய வாய்ப்பை இந்திய அணிக்கு ஏற்படுத்தி தந்தது. இந்த இன்னிங்ஸில் கோலிக்கு அடுத்தபடியான அதிகபட்ச ஸ்கோர் 26 ஆகும். 

இதையடுத்து, 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை விரட்டி இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். 

ஆனால், முதல் இன்னிங்ஸை போல் பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியனுக்கு திரும்பினர். மறுமுனையில், கோலி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழப்பதை கண்டு செய்தவதறியாது இருந்தார். இருப்பினும் அடிலெய்ட் டெஸ்ட் போல் மனஉறுதியுடன் போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கோலி. 

2-ஆவது இன்னிங்ஸிலும் கோலி அரைசதத்தை அடித்து தனிஒருவனாக நம்பிக்கை அளித்தார். அப்போது, இந்திய அணியின் வெற்றிக்கு 61 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. அதனால், அடிலெய்ட் டெஸ்ட் போல் இந்த போட்யிலும் கோலி மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். 

ஆனால், அரைசதம் அடித்த கோலி இந்திய அணியின் வெற்றிக்கு 53 ரன்கள் தேவை என்ற நிலையில் அடிலெய்ட் டெஸ்ட் போன்றே 7-ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால், இந்திய ரசிகர்களின் இதயம் அடிலெய்ட்டை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை நொறுங்கியது. 

கோலி விக்கெட்டின் விளைவு இந்திய அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி. இந்திய அணி இந்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் கோலிக்கு உதவும் வகையில் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் அரைசதம் அடித்திருந்தாலும் இந்திய அணி நிச்சயம் வெற்றியை பெற்று சரித்திரம் படைத்திருக்கும். 

அடிலெய்ட் டெஸ்டில் கோலி தனிஒருவனாக போராடி தோல்வியடைந்தார். ஏகதேசம் அதே நிலையான இந்த போட்டியிலும் கோலி தனிஒருவனாக போராடியதால், அடிலெய்ட் தோல்வியடை துடைத்தெரியும் வகையில் கோலி  இந்திய அணியை வெற்றி பெறச் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்து. ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் அந்த சோகம் கோலியை விடாது துரத்துகிறது.

இந்த போட்டியின் முதன் இன்னிங்ஸ் முடிவில் கோலியிடம், '22 டெஸ்ட் சதங்களில், முதல் இன்னிங்ஸில் அடித்த சதத்தை சிறந்த சதமாக எந்த வரிசையில் இடமளிப்பீர்கள்' என்ற கேள்வி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கோலி, 'சிறந்த சதம் நிச்சயம் அடிலெய்டில் அடித்த சதம், இந்த (எட்ஜ்பாஸ்டன்) சதம் அதற்கு அடுத்த இடம்' என்றார். 

கோலி தெரிவித்தது போல் அவர் அடித்த 22 சதங்களில் நிச்சயம் இந்த 2 சதம் மிகவும் முக்கியமான சதமாகும். காரணம் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்த சதங்கள் இந்த 2 சதங்கள். ஆனால், கோலியின் இந்த 2 சிறந்த சதங்களும் இந்திய அணியின் வெற்றிக்கு பலனளிக்கவில்லை என்பது தான் துரதிருஷ்டவசமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com