பெண் பாடிபில்டருக்கு ஸ்பான்ஸர்கள் கிடைப்பதில்லை! அஸ்வினி வாஸ்கர்

ASHWINI-WASKAR4
ASHWINI-WASKAR4

எச்சரிக்கை இவர்  ஒரு  குத்து  விட்டால்.... பல ஆண்கள்  கீழே விழுவார்கள். அந்த அளவுக்கு கைகளை மட்டுமல்ல உடம்பையும் இரும்பாக மாற்றி வைத்திருப்பவர்.

ஆணழகர்களுக்கு ஈடான, ஏன் ஆண்களுக்கும் சவால்விடும் அளவுக்கு உருக்காய் நிற்கும் பெண்ணழகி அஸ்வினி.

ஆண் அழகர்கள் உடலை பயிற்சியால் அங்குலம் அங்குலமாக சிலை போல் செதுக்கிக் கொள்வது போன்று பெண்கள் உடல் பயிற்சியில் ஈடுபடுவதில்லை.  சிக்கென்று   இருப்பது  வேறு.  உருக்கு உடலோடு  இருப்பது  வேறு.   கடின  உடல் பயிற்சிகளினால், உடல் வனப்பு உடல் மென்மை, வடிவம்  மாறிவிடும் என்பதால், இந்தியப் பெண்கள் இந்த பாடி பில்டிங் பக்கம்  வருவதில்லை.  பாடி பில்டர் ஆணழகன் போட்டி  நடக்கிற  மாதிரி, பாடி பில்டர் பெண் அழகி போட்டியும்  முன்பெல்லாம் நடந்ததில்லை.

பொதுவாக பாடி பில்டிங் என்பது ஆண்களுக்கு மட்டுமான விளையாட்டு... அதில் இந்திய பெண்களுக்கு இடமேயில்லை என்ற ஆணாதிக்கக் கருத்து இருந்தது. அந்தக்  கருத்தை  சுக்கு நூறாக உடைத்து எறிந்திருப்பவர் அஸ்வினி வாஸ்கர். இந்தியாவில் முதல் பாடி பில்டர்  பெண்ணழகி. மும்பையைச் சேர்ந்தவர்.

இனி  அஸ்வினி தொடர்கிறார்:

பளு   தூக்கும்   போட்டிகளில்   இந்தியப்  பெண்கள்  பங்கெடுத்தாலும், பாடி  பில்டிங்,  பளு  தூக்கும்  பிரிவிலிருந்து மாறுபட்டது. பளு தூக்குவதில் இவ்வளவு  பளுவினைத் தூக்கினார் என்று ஒருவரின் உடல் சக்தி வெளிப்படும். பாடி பில்டிங்கில்  உடல் சக்தியை  உடலுக்குள்  தக்க வைத்து,  தசை அமைப்புகளில் அதனை கவிதையாக  வெளிப்படுத்த வேண்டும்.

மூன்று வருடங்களுக்கு முன் நான் சாதாரணப் பெண்ணாக கொஞ்சம் குண்டாகத்தான் இருந்தேன். எனக்கு  மும்பையில்  மீன் ஆராய்ச்சி துறையில்  உட்கார்ந்த இடத்தில் வேலை. அதனால் நான் குண்டானதில்  ஆச்சரியமில்லை.   தோழிகள், 'என்ன  விரிஞ்சுக்கிட்டே போறே..  சீக்கிரம்   வெடிச்சிறப்    போறே ..'  என்று கலாய்க்க ஆரம்பித்ததும்தான் நான் உஷாராகி உடற்பயிற்சி பக்கம் திரும்பினேன். ஒரு வருடத்தில் உடலை சிக்கென்று மாற்றினேன், ஆனால், உடற்பயிற்சி என்னைக்  கப்பென்று பிடித்துக் கொண்டது.

உடற் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகள் செய்து கொண்டிருந்த போது,  பாடி பில்டிங்கில்  ஆண்கள் உடலை  கவர்ச்சியாக  வடிவமைத்துக் கொள்வது போல்  நாமும்  செய்தால் என்ன  என்று தோன்றியது.  வீட்டில்,  பெற்றோர்களிடம், சகோதரனிடம்  பேசி    சம்மதம் வாங்கினேன். இந்த பாடி பில்டிங்கில்  பிகினி  உடை அணிய வேண்டும். அது தான் எனக்கும்  என் குடும்பத்தினருக்கும்  தயக்கமாக இருந்தது.  நாங்கள் நடுத்தர  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பிகினி  உடை  அணிந்து   மேடையில்  கூட்டத்தினர் முன்னிலையில்  நின்றால்,  பலரும் பலவிதத்தில் பேசுவார்கள் என்று  குடும்பத்தினர்  குழம்பிப்  போனார்கள்.

பாடி பில்டிங்கில் இப்படி உடை விதிமுறை இருக்கும்போது,  நமக்காக அந்த விதி முறைகளை தளர்த்த மாட்டார்களே. பாடி பில்டிங் நிகழ்ச்சியின் போது மட்டும்தானே பிகினி அணிய வேண்டி வரும். உடலைக் காட்சிப் பொருளாக காட்டவில்லை. உடல் பயிற்சியால் உடலை எப்படி வைத்திருக்கிறோம் என்பதை சொல்லி புரிய வைக்க முடியாது. கச்சிதமான உடலை வளைத்து  நிமிர்த்திக்  காண்பித்தால்  அனைவரது கவனம்  பயிற்சியின் பக்கம்தான் போகும். உடல் கவர்ச்சி குறித்து நினைவுகள் போகாது. போட்டி என்று வந்துவிட்டால், விளையாட்டின் தேவைகளை அனுசரிக்கத்தானே வேண்டும் என்று பிகினியை ஏற்றுக் கொண்டேன். குடும்பத்திலும்  சம்மதித்தார்கள்.

முதலில் உட்கார்ந்து பார்க்கும் வேலையை உதறினேன். ஆண்கள் செய்யும் பயிற்சிகளை நானும் செய்யத் தொடங்கினேன். பயிற்சி தந்த வரும் ஊக்கப்படுத்தினார்.  மெல்ல  மெல்ல எனது  தசைகள்  முறுக்கேறின...  ஊளைச் சதை உதிர்ந்து போனது. சிக்ஸ் பேக் என்னிடமும் வந்தது. நானும் பெண்ணழகியானேன்.  சத்தான உணவுகள்  சாப்பிட்டு உடலை இறுக்கம் பெறச் செய்தேன். மாதத்திற்கு  இந்த சத்தான உணவுக்கு  இருபதாயிரம்  வரை செலவானது. அப்பா, செலவைப் பற்றி கவலை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பணம் போதாத சமயத்தில்  நகைகளைக் கூட விற்றிருக்கிறேன்.

பாடி பில்டிங்கிலும் கிரிக்கெட் மாதிரிதான். ஆண் வீரர்களுக்கு நல்ல வரவேற்பே. ஸ்பான்சர்கள் பெண்ணழகிகளுக்கு கிடைப்பதில்லை. இதுவரை ஒரு நிறுவனம் கூட என்னை ஸ்பான்சர் செய்ய முன்வரவில்லை. பெண்கள் பாடி பில்டிங்கில் அதிகம் பங்கெடுக்காததற்கு ஊக்குவிப்பு இல்லாததும் முக்கிய காரணம். இதுவரை ஏழு சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். இதற்கான செலவுகளை என் குடும்பம்தான் ஏற்றுக்  கொண்டது. எந்த அமைப்பும் உதவவில்லை. எனக்கு வயது 33 ஆகிறது. பாடி பில்டிங்கை மதிக்கும், இந்தத் துறையில் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கும் திறந்த  மனசுள்ள வரனுக்காகக் காத்திருக்கிறேன்' என்கிறார் அஸ்வினி.

தற்சமயம் மும்பையில் உடலை பிட்டாக வைத்திருக்கும் பயிற்சி தரும் பயிற்சியாளராகவும் பிசியாக இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com