இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் மும்பை, தில்லிக்கு பிளேஆஃப் வாய்ப்புகள் உண்டா?

மீதமுள்ள ஆறு ஆட்டங்களையும் வெல்வது எந்த அணிக்கும் கடினம். எனினும் டி20-களில்...
இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் மும்பை, தில்லிக்கு பிளேஆஃப் வாய்ப்புகள் உண்டா?

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் 31-வது ஆட்டம் பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்றது. புள்ளிகள் பட்டியலில் 6-ஆம் இடத்தில் உள்ள மும்பைக்கும், 7-ஆம் இடத்தில் உள்ள பெங்களூருவுக்கும் இந்த ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்தது. முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. மும்பை தரப்பில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், மெக்ளேனகன், பும்ரா, மார்கண்டே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆனால் மும்பையால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் பெங்களூரு அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியைத் தழுவியது. பெங்களூரு தரப்பில் செளதி, உமேஷ், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 6-வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி 7-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதற்குப் பிறகு மும்பைக்கு வாய்ப்புண்டா? தில்லியும் மும்பை போலவே 8 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்த இரு அணிகளும் பிளேஆஃப் கனவு காணலாமா?

முடியும். 

இரு அணிகளுக்கும் இன்னும் 6 ஆட்டங்கள் மீதமுள்ளன. இந்த ஆறிலும் எந்த அணி வெல்கிறதோ அந்த அணி பிளேஆஃப்-புக்குச் சென்றுவிடும்.

ஏன் இரு அணிகளும் ஆறு ஆட்டங்களில் வென்று தகுதி பெற முடியாதா என்று கேட்கலாம்.

முடியாது. தெரிந்தோ தெரியாமலோ இரு அணிகளும் தங்களுடைய கடைசி ஆட்டங்களில் மோதவுள்ளன. ஒருவேளை அடுத்ததாக இரு அணிகளும் தொடர்ந்து 5 ஆட்டங்களில் வென்றாலும் மே 20 அன்று நடைபெறுகிற மும்பை - தில்லி இடையேயான ஆட்டத்தில் வெல்கிற அணியே பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறும். அதில் தோற்கும் அணி ஏழு வெற்றிகளுடன் வெளியேறவே அதிக வாய்ப்புண்டு.

ஐபிஎல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் 8 வெற்றிகளாவது தேவை. 7 வெற்றிகளுடன் கூட பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும். ஆனால் அதற்கு நெட் ரன்ரேட் ஒத்துழைக்கவேண்டும். 7 வெற்றிகளுடன் பல அணிகள் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் இருந்துள்ளன. ஆனால், ஐபிஎல்-லில் 8 வெற்றிகள் பெற்ற அனைத்து அணிகளும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. எனவே 8 புள்ளிகளை அடையவே அனைத்து அணிகளும் முயற்சி செய்கின்றன.

இந்த அணிகள், ஏழு வெற்றிகள் மட்டுமே 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றவை. 

2008 - தில்லி

2009 - தில்லி

2010 - சென்னை, பெங்களூர்

2014 மும்பை

ஆனால், ஏழு வெற்றிகளுடன் 14 புள்ளிகள் ஏன் 15 புள்ளிகள் எடுத்தும்கூட நெட் ரன்ரேட் அல்லது குறைந்த புள்ளிகள் ஆகிய காரணங்களால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் போன அணிகளும் உண்டு. 

இந்த அணிகள் ஏழு வெற்றிகளுடன் 14 புள்ளிகள் எடுத்தும் (2015-ல் கொல்கத்தா 15 புள்ளிகள் எடுத்தும்) பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியவில்லை.

2008 - மும்பை

2009 - பஞ்சாப்  

2010 - தில்லி, கொல்கத்தா

2011 - பஞ்சாப்

2014 - ராஜஸ்தான்

2015 - கொல்கத்தா, ஹைதராபாத்

2016 - மும்பை, தில்லி

2017 - பஞ்சாப். 

கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் அணிகள் எட்டு வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெறவே மெனக்கெடுகின்றன. இந்த மூன்று வருடங்களில் 16 புள்ளிகள் எடுத்த அணிகளே பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. இதனால் அதை விடவும் குறைந்த புள்ளிகள் கொண்ட அணிகளால் தகுதி பெற முடியாமல் போய்விடுகிறது. எனவே இதே நிலைதான் இந்த வருடமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் மும்பை, தில்லி ஆகிய இரு அணிகளும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் போகவே அதிக வாய்ப்புண்டு. மீதமுள்ள ஆறு ஆட்டங்களையும் வெல்வது எந்த அணிக்கும் கடினம். எனினும் டி20-களில் எந்த ஆச்சர்யமும் நிகழலாம். அடுத்த 5 ஆட்டங்களையும் இரு அணிகளும் தொடர்ச்சியாக வென்றாலும் மே 20 அன்று ஏதாவதொரு அணி தோற்றுப்போய் வெளியேறித்தான் ஆகவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com