சேவாக்குடன் மோதலா? ப்ரீத்தி ஜிந்தா மறுப்பு!

கிரிக்கெட் விவகாரங்களில் ப்ரீத்தி ஜிந்தா தேவையில்லாமல் தலையிடுகிறார். இது நீடித்தால்... 
சேவாக்குடன் மோதலா? ப்ரீத்தி ஜிந்தா மறுப்பு!

சேவாக்குடன் தான் மோதலில் ஈடுபடவில்லை என பஞ்சாப் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விளக்கம் அளித்துள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு, பஞ்சாப் அணியை 15 ரன்களில் ராஜஸ்தான் வீழ்த்தியது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 158/8 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஜோஸ்பட்லர் சிறப்பாக ஆடி 82 ரன்களை எடுத்தார். ஆனால், 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து பஞ்சாப் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 95 ரன்களை எடுத்தார்.  அப்போதும் வெற்றி கிடைக்கவில்லை. மூன்றாவதாகக் களமிறங்கி ஆச்சர்யப்படுத்திய கேப்டன் அஸ்வின், ரன் ஏதுமின்றி கெளதம் பந்தில் போல்டானார். இதுதான் பஞ்சாப் அணியில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

எளிதாக ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தில் கருண் நாயர், மனோஜ் திவாரிக்கு முன்பு அஸ்வினை மூன்றாவதாகக் களமிறக்க வேண்டிய அவசியம் என்ன என்று அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, அணியின் ஆலோசகர் சேவாக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் ஜெயித்து வந்த பஞ்சாப் அணி, திடீரென கடந்த 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்டுள்ளது. இந்த நிலையில் தேவையில்லாமல் அணியின் வரிசையில் சேவாக் மாற்றம் செய்வதாக ப்ரீத்தி ஜிந்தா, சேவாக்கைக் குற்றம் சுமத்தியுள்ளது அணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கிரிக்கெட் விவகாரங்களில் ப்ரீத்தி ஜிந்தா தேவையில்லாமல் தலையிடுகிறார். இது நீடித்தால் இந்த வருடத்துடன் நான் விலகிவிடுவேன் என்று அணி நிர்வாகத்திடம் சேவாக் கூறியுள்ளார். மேலும், இந்தச் சர்ச்சைகளால் வீரர்களின் கவனம் சிதறக்கூடாது என்பதில் சேவாக் கவனமாக இருக்கிறார். எனவே இதுகுறித்து ஊடகங்களில் பேச மறுத்துவருகிறார் என ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான மோஹித் பர்மான், இச்செய்தியை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: செய்திகளில் குறிப்பிடப்படும் சம்பவத்தை நான் நேரில் பார்க்கவில்லை. அணியில் எவ்வித பிரச்னையும் இல்லை. சேவாக் - ப்ரீத்தி ஜிந்தா இடையே மோதல் எதுவும் இல்லை. நான் இருவரிடம் இதுகுறித்து பேசியுள்ளேன் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தாவும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் ட்வீட் செய்துள்ளதாவது: தவறான செய்தி வெளியாகியுள்ளது. எனக்கும் சேவாக்குக்கும் இடையேயான உரையாடல் இவ்வாறு பெரிதாக்கப்பட்டுள்ளது. திடீரென நான் வில்லி ஆகியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது பஞ்சாப் அணி. 10 ஆட்டங்களில் 12 புள்ளிகள் வைத்துள்ள பஞ்சாப் அணி, பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுகிற நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com