டி20 காட்சிப் போட்டி: கடைசிப் பந்தில் வெற்றி பெற்ற சூப்பர்நோவாஸ் அணி!

மும்பையில் நடைபெற்ற இந்திய மற்றும் அயல்நாட்டு வீராங்கனைகள் பங்கேற்கும் முதலாவது மகளிர் டி20 காட்சிப் போட்டியில்...
டி20 காட்சிப் போட்டி: கடைசிப் பந்தில் வெற்றி பெற்ற சூப்பர்நோவாஸ் அணி!

மும்பையில் நடைபெற்ற இந்திய மற்றும் அயல்நாட்டு வீராங்கனைகள் பங்கேற்கும் முதலாவது மகளிர் டி20 காட்சிப் போட்டியில் சூப்பர்நோவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் சார்பிலும் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே மகளிர் டி20 போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில் இந்தக் காட்சிப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். 

டிரைல்பிளேஸர்ஸ் மற்றும் சூப்பர்நோவாஸ் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டன. டிரைல்பிளேஸர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தானாவும், சூப்பர்நோவாஸுக்கு ஹர்மன்பிரீத் கெளரும் கேப்டன்களாகச் செயல்பட்டார்கள். மேலும் முன்னணி வீராங்கனைகளான சூசி பேட்ஸ், அலிஸா ஹீலி, பெத் மூனி, எல்சி பெரி, மேகன் ஷூல்ட்ஸ், டேனியல் வயாட் போன்ற அயல்நாட்டு வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளார்கள்.

டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டிரைல்பிளேஸர்ஸ் அணி 4-வது ஓவரில் 26 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் மந்தனா 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய சூஸி பேட்ஸ் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். எனினும் சூப்பர்நோவாஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சால், டிரைல்பிளேஸர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களே எடுக்கமுடிந்தது. சூப்பர்நோவாஸின் மேகன் ஷுட், எல்லீஸ் பெர்ரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். டி20 ஆட்டம் என்றாலும் டிரைல்பிளேஸர் அணி வீராங்கனைகளால் ஒரு சிக்ஸும் அடிக்கமுடியாமல் போனது. 

எளிதான இலக்கை நன்கு எதிர்கொண்டது சூப்பர்நோவாஸ் அணி. 15-வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் என்கிற பாதுகாப்பான நிலைமையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 30 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமையே இருந்தது. எனினும் அடுத்த இரு ஓவர்களில் வேதா கிருஷ்ண மூர்த்தி 2 ரன்களிலும் ஹர்மண்ப்ரீத் கெளர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் ஆட்டம் பரபரப்பானது. 12 பந்துகளில் 10 ரன்கள் என்கிற நிலைமை இருந்தபோது 19-வது ஓவரின் கடைசிப் பந்தில் மேஷ்ராம் ரன் அவுட் ஆனார். இதனால் சூப்பர்நோவாஸ் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. சூஸி பேட்ஸ் வீசிய கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சூப்பர்நோவாஸ் அணி. டேனியல் வயாட் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com