விராட் கோலி உடற்தகுதி குறித்து பிசிசிஐ அறிக்கை!

மே 17 அன்று பெங்களூரில் நடைபெற்ற பெங்களூர் - ஹைதராபாத் இடையேயான ஐபிஎல் போட்டியில்...
விராட் கோலி உடற்தகுதி குறித்து பிசிசிஐ அறிக்கை!

டெஸ்ட் விளையாடக் கூடிய அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக அடுத்த மாதம் விளையாடுகிறது. இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணியான சர்ரேவில் ஜூன் மாதம் முழுவதும் விளையாட இந்திய கேப்டன் விராட் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்திய அணி அடுத்தச் சில மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி 20 போட்டிகளில் பங்கேற்கிறது. இங்கிலாந்தில் நிலவும் ஆட்ட சூழல்நிலை குறித்து அறிவதற்காக கோலி, சர்ரே அணியில் விளையாட இருந்தார்.  

இந்நிலையில் விராட் கோலியின் உடல்நிலை குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. கோலிக்குத் தண்டுவட நரம்பில் (spinal nerve) காயம் ஏற்பட்டதையடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவர்களிடம் கலந்தாலோசித்ததாகவும் கோலிக்கு ஏற்பட்டுள்ள சவ்வு விலகல் (Herniated disk) பிரச்னை காரணமாக அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக கவுண்டி கிரிக்கெட் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றால் காயம் மேலும் தீவிரமாகி, இங்கிலாந்து தொடரிலிருந்து விலக நேரிடும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தாக ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியானது.

இதையடுத்து, விராட் கோலியின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மே 17 அன்று பெங்களூரில் நடைபெற்ற பெங்களூர் - ஹைதராபாத் இடையேயான ஐபிஎல் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலிக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டது. 

சர்ரே அணியுடன் ஜூன் மாதம் விளையாடுவதாக இருந்தார் கோலி. இந்தக் காயத்தால் அவர் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்கப் போவதில்லை. பிசிசிஐயின் மருத்துவக் குழு மற்றும் சிறப்பு மருத்துவரின் அறிவுரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐயின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் விராட் கோலி சிகிச்சை மேற்கொள்வார். ஜூன் 15 முதல் பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளில் ஈடுபடுவார். அங்கு அவருக்கு உடற்தகுதி பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். அடுத்து வருகிற அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான முழு உடற்தகுதியை விராட் கோலி விரைவில் அடைவார் என்று பிசிசிஐ மருத்துவக் குழு நம்பிக்கையுடன் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com