தனி ஒருவனாக அணியை இறுதிச்சுற்றுக்குள் நுழைய வைத்த ரஷித் கான்! (விடியோ)

ஃபீல்டிங்கில் ஒரு ரன் அவுட் மற்றும் இரு கேட்சுகள் பிடித்து தனி ஒருவனாக அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியுள்ளார்... 
தனி ஒருவனாக அணியை இறுதிச்சுற்றுக்குள் நுழைய வைத்த ரஷித் கான்! (விடியோ)

கொல்கத்தா அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஹைதராபாத் ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைந்தது.

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான ஐபிஎல் பிளே ஆஃப் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 174 ரன்களை எடுத்தது. இறுதி ஓவரில் ரஷித் 24 ரன்களைக் குவித்தார். அவர் 34 ரன்கள் எடுத்து கடைசிக் கட்டத்தில் அணியின் ஸ்கோரைப் பெரிதாக உயர்த்தினார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டையும், கார்லோஸ், கெளல் தலா 2 விக்கெட்டையும், ஷகிப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் இறுதிச் சுற்றில் நுழைந்தது. வரும் 27-ஆம் தேதி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையுடன் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் மோதுகிறது.

சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 10 பந்துகளில் 34 ரன்களை குவித்தும், மேலும் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ரஷித் கான் பேட்டிங் செய்ய வந்தபோது ஹைதராபாத் அணி, 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அடுத்து வீசப்பட்ட 12 பந்துகளில் (ஒரு வைட்) 10 பந்துகளை எதிர்கொண்ட ரஷித் கான் 4 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 174 ஆக உயர்த்தினார். அவருடைய இந்த ஆக்ரோஷமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி நிலைகுலைந்து போனது. பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் அசத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஃபீல்டிங்கில் ஒரு ரன் அவுட் மற்றும் இரு கேட்சுகள் பிடித்து தனி ஒருவனாக அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com