ஐபிஎல் விநோதம்: அதிக ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளருக்கு இந்திய அணியில் இடம்!

இறுதிச்சுற்று உள்பட 4 ஆட்டங்களில் 40 ரன்களுக்கு மேல் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்...
ஐபிஎல் விநோதம்: அதிக ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளருக்கு இந்திய அணியில் இடம்!

இந்திய அணி ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, இங்கிலாந்துடன் டெஸ்ட், ஒரு நாள், டி 20 போட்டிகளில் கலந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டியிலும், அயர்லாந்துடன் இரண்டு டி 20 போட்டிகளும், இங்கிலாந்துடன் 5 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி 20 போட்டிகளில் இந்தியா மோதுகிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் பிசிசிஐயால் இந்த மாதம் 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிகளில் தில்லி அணியில் இடம் பெற்றுள்ள ஷ்ரேயஸ் ஐயர், பஞ்சாப் அணியின் கேஎல். ராகுல், ஐதராபாத் பந்துவீச்சாளர் சித்தார்த் கெளல், சென்னை சூப்பர் கிங்ஸின் அம்பட்டி ராயுடு ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இதிலுள்ள விநோதமே, ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த ஹைதராபாத் அணியின் சித்தார்த் கெளல், இந்திய அணியில் இடம்பெற்றதுதான். இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் கெளல் இடம்பெற்றுள்ளார். மேலும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், 17 ஐபிஎல் ஆட்டங்களில் 547 ரன்கள் கொடுத்து, அதிக ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் 28 வயது சித்தார்த் கெளல். இதையடுத்து இவர் இந்திய அணிக்குத் தேர்வானது குறித்து விமரிசனங்களை வரவழைத்துள்ளது. 

17 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தாலும் கெளல் ரன்களை வாரி வழங்கியதுதான் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அவருடைய எகானமி - 8.28 என்பது மிக அதிகமே. கடந்த வருடம் இதைவிட அதிக எகானமி - 8.41.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் சித்தார்த் கெளலின் பங்களிப்பைப் பார்க்கலாம். 

கெளல் - இந்திய அணிக்குத் தேர்வு ஆவதற்கு முன்பு (மே 7 வரை): ஐபிஎல் 2018

2/17, 2/29, 1/37, 1/33, 0/33, 3/23, 0/25, 2/23, 1/37, 1/25 (மே 7).

கெளல் - இந்திய அணிக்குத் தேர்வான பிறகு (மே 10 முதல் இறுதிச்சுற்று வரை): ஐபிஎல் 2019 

0/48, 0/40, 2/44, 2/26, 2/32, 2/32, 0/43 (இறுதிச்சுற்று).

எவ்வளவு வித்தியாசம்! 

இந்திய அணிக்குத் தேர்வான பிறகு விளையாடிய 7 ஆட்டங்களில் ஓரே ஒரு ஆட்டத்தில் மட்டும் சிறப்பாகப் பந்துவீசி 2/26 என குறைவான ரன்கள் கொடுத்துள்ளார் கெளல். ஆனால் மற்ற 6 ஆட்டங்களிலும் 30 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். இறுதிச்சுற்று உள்பட 4 ஆட்டங்களில் 40 ரன்களுக்கு மேல் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். கெளல் இவ்வளவு மோசமாகப் பந்துவீசுவார் என்பது அவர் மீது நம்பிக்கை வைத்த அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

ஆனால் முதல் 10 ஆட்டங்களில் அவர் வெளிப்படுத்திய திறமை முற்றிலும் வேறானது. ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெறுவதற்கு கெளலின் பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்தது. இதில் கவனம் ஈர்த்ததால்தான் அவருக்கு இந்திய அணியில் இடம்கிடைத்தது. மூன்று வெளிநாட்டுத் தொடர்களில் அவருடைய பெயர் இடம்பெற்றது.

ஆனால் கடைசி 7 ஆட்டங்களில் சொதப்பியதால் கெளலின் பெயர், இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தியத் தேர்வுக்குழுவினரின் முடிவின் மீது கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டி முடியும்வரை சற்று பொறுமை காத்திருக்கலாம், ஐபிஎல் போட்டியின் பாதி வரை விளையாடியதை வைத்து இந்திய அணியில் சேர்த்திருக்கக் கூடாது என்கிற விமரிசனங்கள் தற்போது எழுந்துள்ளன. எனினும் இந்திய அணி வீரராக விளையாடும்போது கெளலின் திறமை வேறுவிதத்தில் வெளிப்படும், இந்திய அணியின் வெற்றிக்கு நிச்சயம் பங்களிப்பார் என்றும் அவர் மீது பலரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் நாம் எந்த சித்தார்த் கெளலைப் பார்க்கவுள்ளோம்? முதல் 10 ஆட்டங்களில் அசத்திய கெளலா, இல்லை கடைசி 7 ஆட்டங்களில் சொதப்பிய கெளலா? காத்திருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com