அரையிறுதிக்கு முன்னேறுவது யார்? கேரளம்-நார்த் ஈஸ்ட் இன்று பலப்பரீட்சை

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 56-ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டம் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் கேரள பிளாஸ்டர்ஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 56-ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டம் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் கேரள பிளாஸ்டர்ஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, 4-ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும். இதனால் இந்த ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் கேரள அணி டிரா செய்தாலே, அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஆனால் நார்த் ஈஸ்ட் அணி, கேரளத்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்குகிறது.
புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி முதலிடத்தைப் பிடித்துவிட்டது. எஞ்சிய 3 இடங்கள், கேரளம்-நார்த் ஈஸ்ட் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே அமையும். இந்த ஆட்டத்தில் கேரள அணி வெல்லும்பட்சத்தில் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புள்ளது. மாறாக தோற்கும்பட்சத்தில் 4-ஆவது இடமே கிடைக்கும். அதேநேரத்தில் நார்த் ஈஸ்ட் அணி வெல்லும்பட்சத்தில் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்தைப் பிடிக்கும்.
தற்போதைய நிலையில் புள்ளிகள் பட்டியலில் கேரள அணி 19 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், நார்த் ஈஸ்ட் அணி 18 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளன. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது கேரள அணிக்கு பலமாகும். அந்த அணி சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த முறை இறுதிச்சுற்று கொச்சியில் நடைபெறுகிறது. அதனால் கோப்பையை வெல்ல கேரள அணிக்கு நல்ல வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் கேரள அணி அபாரமாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டம் குறித்து கேரள அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீவ் கோபல் கூறுகையில், "நாங்கள் வழக்கம்போல் இந்த ஆட்டத்திலும் விளையாடுவோம். போட்டியை எப்படி டிரா செய்வது என்பது எனக்குத் தெரியாது. அதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சிப்போம்' என்றார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா இரு வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஓர் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

போட்டி நேரம்: இரவு 7 நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com