உசேன் போல்டுக்கு உலகின் சிறந்த தடகள வீரர் விருது

2016-ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த தடகள வீரர் விருதை உலகின் அதிவேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட் தட்டிச் சென்றார்.
உசேன் போல்டுக்கு உலகின் சிறந்த தடகள வீரர் விருது

2016-ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த தடகள வீரர் விருதை உலகின் அதிவேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட் தட்டிச் சென்றார்.
சர்வதேச தடகள சம்மேளனத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை 6-ஆவது முறையாக பெற்றுள்ளார் உசேன் போல்ட்.
மொனாக்கோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது உசேன் போல்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உசேன் போல்ட் கடந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 மீ. தொடர் ஓட்டம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
உலகின் சிறந்த வீராங்கனைக்கான விருது எத்தியோப்பியாவின் அல்மாஸ் அயானாவுக்கு வழங்கப்பட்டது. இவர், கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 10,000 மீ. ஓட்டத்தில் உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தடகள சங்க நிர்வாகிகள், தடகள வீரர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு மற்றும் ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் இந்த ஆண்டின் சிறந்த தடகள வீரர், வீராங்கனை விருதுக்கு முறையே உசேன் போல்ட் மற்றும் அயானா தேர்வு செய்யப்பட்டனர்.

200 மீ. ஓட்டத்தில் புதிய உலக சாதனைக்கு வாய்ப்புள்ளதா?

200 மீ. ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைக்க தனக்கு இனி வாய்ப்பில்லை என்று ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 200 மீ. ஓட்டத்தில் எனது பழைய சாதனையை முறியடிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால் எனது கடைசி சீசனில் 200 மீ. ஓட்டத்தில் தீவிரம் காட்டும் திட்டம் இல்லை.
ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது 200 மீ. ஓட்டத்தில் எனது பழைய சாதனையை (19.19 விநாடிகள்) முறியடித்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் இறுதிச்சுற்றில் வளைவில் ஓடியபோது புதிய சாதனை படைக்கும் அளவுக்கு எனது கால்கள் விரைவாக செயல்படவில்லை என்பதை உணர்ந்தேன்.
கடந்த சீசனுக்குப் பிறகு நான் கடுமையாக உழைத்தபோதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை என்பதை கண்டுபிடித்தேன். எனவே 200 மீ. ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பது கடினம் என்பதை புரிந்துகொண்டேன். எனது தடகள வாழ்க்கையின் கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டேன். அதனால் கடின பயிற்சியில் ஈடுபட முயற்சிக்கமாட்டேன். இந்த சீசன் முழுவதும் காயமடையாமல் இருப்பேனா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.
2020-இல் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ளதா என போல்ட்டிடம் கேட்டபோது, அதை மறுத்த அவர், "ஓய்வு பெற வேண்டாம். மீண்டும் தடகளத்துக்கு வாருங்கள்' என்றுதான் எனது பயிற்சியாளர் கூறுகிறார். ஆனால் நான் அதை செய்யமாட்டேன். நிச்சயமாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பில்லை என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். இதை தற்பெருமைக்காக கூறவில்லை.
எனக்கு 30 வயது ஆகிறது. இந்த வயதில் மற்றவர்கள் சாதிக்காததை நான் சாதித்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரையில் நான் விரும்பிய எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டேன். இந்த சீசனைப் பொறுத்தவரையில் நான் எனது ரசிகர்களுக்காகவே போட்டியில் பங்கேற்கிறேன். ஏராளமானோர் நான் ஓடுவதைப் பார்க்க விரும்புகிறார்கள்.
2007-இல் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிதான் எனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது 200 மீ. ஓட்டத்தில் பங்கேற்ற நான், டைசனுக்கு அடுத்தபடியாக 2-ஆவது இடத்தைப் பிடித்தேன். அதைத் தொடர்ந்து என்னிடம் பேசிய எனது பயிற்சியாளர், "உடற்பயிற்சியில் தீவிரம் கவனம் செலுத்துங்கள். நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், வலுமிக்க வீரராக இருக்க வேண்டும்' என்றார். அதுமுதலே நான் கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன்' என்றார் போல்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com