ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி தொடர்ந்து 6-ஆவது முறையாக சாம்பியன்

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
கோப்பையுடன் இந்திய வீராங்கனைகள்.
கோப்பையுடன் இந்திய வீராங்கனைகள்.

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
இதன்மூலம் ஆசிய கோப்பை போட்டியில் தொடர்ந்து 6-ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது இந்திய மகளிர் அணி. இதுவரை 6 முறை மட்டுமே நடைபெற்றுள்ள ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவைத் தவிர வேறு எந்த அணியும் சாம்பியன் பட்டம் வென்றதில்லை.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணியின் தரப்பில் தொடக்க வீராங்கனை மிதாலி ராஜ் 65 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் அனாம் அமின் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பாகிஸ்தான் தோல்வி: இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பிஸ்மா மரூப் 25, தொடக்க வீராங்கனை ஜவேரியா கான் 22, ஆய்ஷா ஜாபர் 15 ரன்கள் எடுத்தனர்.
இந்தியத் தரப்பில் இக்தா பிஸ்த் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி விருதுகளை இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் தட்டிச் சென்றார். இந்தத் தொடரில் மிதாலி ராஜ் 4 இன்னிங்ஸ்களில் 220 ரன்கள் குவித்தார்.
ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் வென்றதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் கண்ட தோல்விக்கு ஆறுதல் தேடிக்கொண்டது இந்திய அணி.
இந்த ஆசிய கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தோடு சேர்த்து மொத்தம் 6 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி, அவையனைத்திலும் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
2004 முதல் நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை போட்டியின் முதல் நான்கு தொடர்கள் 50 ஓவர் முறையில் விளையாடப்பட்டன. அதன்பிறகு நடைபெற்ற இரு தொடர்களும் டி20 முறையில் நடைபெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com