லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தும் விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு

ஐபிஎல் முறைகேடு விவகாரத்துக்கு பின்னர், பிசிசிஐ-யின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில்...
லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தும் விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு

ஐபிஎல் முறைகேடு விவகாரத்துக்கு பின்னர், பிசிசிஐ-யின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் முன்னாள் நீதிபதி ஆர்எம். லோதா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவானது உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தனது பரிந்துரைகளைத் தாக்கல் செய்தது. தகவலறியும் உரிமைச் சட்ட வரம்பின் கீழ் பிசிசிஐ அமைப்பை கொண்டு வர வேண்டும்; பிசிசிஐயில் உயர் பதவிகளில் அரசியல்வாதிகள் அங்கம் வகிக்கக் கூடாது; பிசிசிஐ அதிகாரிகள் இருவேறு பதவிகளை வகிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் லோதா குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்தப் பரிந்துரைகளுக்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும், இந்தப் பரிந்துரைகளை பிசிசிஐ கட்டாயம் ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்தப் பரிந்துரைகளை ஏற்க, வரும் டிசம்பர் 3-ம் தேதியைக் காலக்கெடுவாகவும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது. இதுகுறித்து நீதிமன்றத்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

லோதா குழுவின் பரிந்துரைப்படி பிசிசிஐ நிர்வாகத்தில் சிஏஜி உறுப்பினர் ஒருவரை நியமித்தால், அது அரசின் தலையீடாக அமையும் என கடிதம் தருமாறு ஐசிசி சிஇஓவிடம் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கேட்டதாக தகவல் வெளியானது. ஐசிசி சிஇஓவிடம் கடிதம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாகத் தனியாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அனுராக் தாக்குருக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன்படி, அனுராக் தாக்குர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில், "லோதா குழுவின் பரிந்துரைப்படி பிசிசிஐ நிர்வாகத்தில் சிஏஜி உறுப்பினர் ஒருவரை நியமித்தால், அது அரசின் தலையீடாகும் என அறிக்கை விடுமாறு ஐசிசி சிஇஓவிடம் நான் கேட்டதாக கூறப்படுவதை மறுக்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின்போது முன்னாள் பிசிசிஐ தலைவரும், தற்போதைய ஐசிசி சேர்மனுமான சஷாங்க் மனோகரை சந்தித்துப் பேசினேன். சஷாங்க் மனோகர், பிசிசிஐ தலைவராக இருந்தபோது, லோதா குழுவின் பரிந்துரைப்படி சிஏஜி உறுப்பினர் ஒருவரை பிசிசிஐ நிர்வாகத்தில் நியமித்தால் அது அரசின் தலையீடாக அமையும். அதனால் பிசிசிஐக்கு ஐசிசி தடை விதிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இப்போது ஐசிசி சேர்மனாக இருக்கும் சஷாங்க், பிசிசிஐ தலைவராக இருந்தபோது எடுத்த நிலைப்பாடு தொடர்பாகக் கடிதம் அளிக்க முடியுமா என்று கேட்டேன். ஆனால் சஷாங்கோ, "சிஏஜி உறுப்பினர் நியமன விவகாரத்துக்கு எதிராக நான் முடிவெடுத்தபோது, வழக்கு விசாரணையில்தான் இருந்தது' என விளக்கம் அளித்தார்' என்று தாக்குர் தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ) செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட, முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் பி.சி.சி.ஐ பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்தது. 

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு ஓர் அறிக்கையை தாக்கல் செய்தது. தாம் வகுத்த விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவி வகித்து வரும் அதிகாரிகளை நீக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், ஐபிஎல் அமைப்பின் நிர்வாகச் செயல்பாடுகளை வழிநடத்தும் பார்வையாளராக முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளையை நியமிக்கவும் லோதா குழு பரிந்துரை செய்தது. 

அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது: பிசிசிஐ அமைப்பின் அதிகாரிகளுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள பெரும்பாலான பரிந்துரைகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. எனினும், லோதா குழு பரிந்துரைத்துள்ள விதிமுறைகளுக்குப் புறம்பாக பிசிசிஐயிலும், மாநில கிரிக்கெட் சங்கங்களிலும் பல அதிகாரிகள் பதவி வகித்து வருகின்றனர். அத்தகைய அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லோதா குழுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பிசிசிஐயின் நிர்வாகப் பணிகளை வழிநடத்தும் பார்வையாளராக முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளையை நியமிக்க வேண்டும். மேலும், பிசிசிஐ-யின் வரவு - செலவுகளை ஆய்வு செய்ய ஒரு தணிக்கையாளரையும், நிர்வாகக் குழு அலுவலர்களையும் நியமிக்க அவருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் லோதா குழு தெரிவித்தது. 

இந்நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த விசாரணை டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாக்குருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரால் இன்றைய விசாரணையில் கலந்துகொள்ளமுடியவில்லை. இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com