கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.1.33 கோடி செலவிட அனுமதி: உச்சநீதிமன்றம்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரூ.1.33 கோடி செலவிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரூ.1.33 கோடி செலவிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.
இதுதொடர்பாக, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்காக பிசிசிஐ ரூ.1.33 கோடி செலவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அத்துடன், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளை நடத்துவதற்கும், போட்டி ஒன்றுக்கு ரூ.25 லட்சம் வீதம் செலவிட பிசிசிஐக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நிதியானது, போட்டிகளை நடத்துவதற்காக மட்டுமே சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதில் எந்தவொரு பகுதியும் சங்கங்களுக்கான நிதியாக அளிக்கப்படக் கூடாது.
அத்துடன், ஏற்கெனவே நடந்துமுடிந்த 3 டெஸ்ட் போட்டிகள் மூலம் கிடைத்துள்ள வருமானம், தற்போது நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான செலவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவை தொடர்பாக பிசிசிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்காக ரூ.1.33 கோடியும், 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளை நடத்துவதற்காக ரூ.3.79 கோடியும் செலவிட அனுமதிக்குமாறு கோரி பிசிசிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com