மும்பை டெஸ்ட்: விஜய், புஜாரா அபார பேட்டிங்! இங்கிலாந்து 400!

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை டெஸ்ட்: விஜய், புஜாரா அபார பேட்டிங்! இங்கிலாந்து 400!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அபாரமாகப் பந்துவீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு ஆடிய இந்திய அணி, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இங்கிலாந்து அணி 94 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தபோது, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பென் ஸ்டோக்ஸ் 25, ஜோஸ் பட்லர் 18 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்தியத் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இது அவருடைய 5-வது விக்கெட் ஆகும். இதன்பிறகு சிறிதுநேரம் தாக்குப்பிடித்த வோக்ஸ், 11 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார். வந்தவேகத்தில் 4 ரன்களுடன் ஜடேஜாவுக்கு விக்கெட் அளித்து வெளியேறினார் ரஷித். இதனிடையே இன்று சிறப்பாக ஆடிவந்த பட்லர், 106 பந்துகளில் அரை சதம் எடுத்தார். பட்லரும் பாலும் நன்கு ஆடி இங்கிலாந்தின் ஸ்கோரை உயர்த்தினார்கள். 

உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்தது. பட்லர் 64 ரன்களுடனும் பால் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள்.

இதன்பிறகு 31 ரன்களில் வீழ்ந்தார் பால். அவருடைய விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி கெளரவமான ஸ்கோர் அடைய உதவிகரமாக இருந்த பட்லர் 76 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 130.1 ஓவர்களில் 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின் 6, ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, தேநீர் இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. ராகுல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். விஜய் 31, புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள்.  

நாளின் கடைசிப் பகுதியில் இருவரும் கவனமாக ஆடினார்கள். இதனால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் இவ்விருவரையும் பிரிக்கமுடியாமல் போனது. 2-ம் நாளின் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.  விஜய் 70, புஜாரா 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். விஜய் 126 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com