விருந்தாகிறது ஆஸ்திரேலிய ஓபன்: களத்தில் முர்ரே, கெர்பர், ஃபெடரர், செரீனா

2017-ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், உலகின் முதல் நிலை வீரர் ஆன்டி முர்ரே, முதல் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், ஃபெடரர், செரீனா உள்ளிட்டோர் களமிறங்கி
விருந்தாகிறது ஆஸ்திரேலிய ஓபன்: களத்தில் முர்ரே, கெர்பர், ஃபெடரர், செரீனா

2017-ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், உலகின் முதல் நிலை வீரர் ஆன்டி முர்ரே, முதல் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், ஃபெடரர், செரீனா உள்ளிட்டோர் களமிறங்கி டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர்.
ஏறத்தாழ, தரவரிசையில் முதல் 99 இடங்களுக்குள் உள்ள வீரர் வீராங்கனைகள் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஆடவர் ஒற்றையர் நடப்புச் சாம்பியனும், உலகின் 2-ஆம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் 7-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறார். மகளிர் ஒற்றையர் நடப்புச் சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான ஏஞ்சலிக் கெர்பர், பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள விளையாட உள்ளார்.
தோள்பட்டை காயம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதலே போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ள செரீனா வில்லியம்ஸ், தனது 23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அடைய இதில் களம் காண்கிறார். இந்தப் பட்டத்தை அவர் கைப்பற்றும் பட்சத்தில், முன்னாள் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை முறியடித்து, ஓபன் எராவில் புதிய சாதனை படைப்பார்.
காயத்திலிருந்து மீண்டுள்ள செரீனா, ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக ஜனவரி தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டியில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து விளையாட உள்ளார்.
தசைக் குருத்தெலும்பு காயம் காரணமாக, தனது டென்னிஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட உள்ளார். அதற்கு முன்பாக பெர்த்தில் நடைபெறவுள்ள ஹோப்மேன் கப் டென்னிஸ் போட்டியில் அவர் விளையாடுகிறார்.
அதேபோல், தனது முழு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால், பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கிறார்.
அஸரென்கா பங்கேற்கவில்லை
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2 முறை பட்டம் வென்றவரான பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா, கர்ப்பமடைந்துள்ளதால் எதிர்வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com