ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: குவாஹாட்டியில் இன்று தொடக்கம்

மூன்றாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் சனிக்கிழமை தொடங்குகிறது.

மூன்றாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் சனிக்கிழமை தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் ஆட்டமான இதில் வென்று இந்த சீசனை வெற்றியோடு தொடங்க இரு அணிகளுமே முயற்சிக்கும் என்பதால் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கேரளா இரு முறையும், நார்த் ஈஸ்ட் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது.
இந்த சீசனில் சென்னையின் எப்.சி., புணே சிட்டி, மும்பை சிட்டி, கேரள பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட், அட்லெடிகோ டி கொல்கத்தா, கோவா எப்.சி. ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா இரு ஆட்டங்களில் (உள்ளூர், வெளியூர் அடிப்படையில்) மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 56 லீக் ஆட்டங்கள், 4 அரையிறுதி, ஓர் இறுதி ஆட்டம் என மொத்தம் 61 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 79 நாள்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது. டிசம்பர் 4-ஆம் தேதியோடு லீக் சுற்று நிறைவடைகிறது. டிசம்பர் 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் அரையிறுதி ஆட்டங்களும், டிசம்பர் 18-ஆம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன.
ரூ.15 கோடி பரிசு: ஐஎஸ்எல் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.15 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.8 கோடியும், 2-ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.4 கோடியும், 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.1.5 கோடியும் வழங்கப்படவுள்ளன.

தொடக்க விழாவில் ஆலியா பட், ஜாக்குலின் நடனம்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் தொடக்க விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில் பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட், ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண் தவன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பிரமாண்டமாக நடைபெறும் தொடக்க விழாவில்
500-க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் நடனமாட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி 30 நிமிடங்கள் நடைபெறுகிறது.
இந்த விழாவில் கேரள அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர், ஐஎஸ்எல் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான நீதா அம்பானி, நார்த் ஈஸ்ட் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஜான் ஆப்ரஹாம், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

தொடக்க விழா நேரம்: மாலை 6, போட்டி நேரம்: இரவு 7,
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com