ஒருநாள் போட்டி: வில்லியம்சன் சதம்! இந்தியாவுக்கு 243 ரன்கள் இலக்கு!

முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள்... 
ஒருநாள் போட்டி: வில்லியம்சன் சதம்! இந்தியாவுக்கு 243 ரன்கள் இலக்கு!

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி சதம் எடுத்தார்.

தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களில் மாற்றம் செய்யப்படவில்லை. 

தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல, இரண்டாவது போட்டியிலும் வெற்றியை தக்க வைக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. நியூஸிலாந்து அணியைப் பொறுத்த வரையில், டெஸ்ட் தொடரை முற்றிலும் இழந்த நிலையில் ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவியது அந்த அணிக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆகவே, தொடர் தோல்வியை தவிர்த்து, அதிலிருந்து மீளும் வகையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளார். முன்னதாக, செவ்வாய்க்கிழமை சிறிது நேரம் அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். எனினும், காய்ச்சல் தாக்கத்தில் இருந்து அவர் முழுமையாக மீண்டு வரவில்லை என்று பிசிசிஐ மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக அணியில் மாற்று வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து அணி, 2-வது பந்திலேயே தொடக்க வீரர் கப்திலின் விக்கெட்டை இழந்தது. அவரை உமேஷ் யாதவ் க்ளீன்போல்ட் செய்தார். இதனால் முதல் ஒருநாள் போட்டி போல இதிலும் நியூஸிலாந்து வீரர்கள் தடுமாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறகு ஜோடி சேர்ந்த வில்லியம்சனும் லாதமும் இந்திய பந்துவீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொண்டார்கள். 4 ஓவர்களுக்குப் பிறகு வேகமாக ரன்கள் குவிக்க ஆரம்பித்தார்கள். முதல் 10 ஓவர்களில் 50 ரன்கள் கிடைத்தது. 56 பந்துகளில் அரை சதம் எட்டினார் வில்லியம்சன். 

நம்பிக்கையுடன் ஆடிவந்த லாதம், 46 ரன்களில் ஜாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த டெய்லர், 42 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து மிஸ்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்சன் இந்திய பந்துவீச்சை திறமையாக எதிர்கொண்டார். பந்துகளை வீணடிக்காமல் வேகமாக ரன்கள் குவித்தார். 109 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார் வில்லியம்சன். நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 2014 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தபோது 21 ரன்களில் மிஸ்ரா பந்துவீச்சில் ஆண்டர்சன் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சரிவு ஏற்படத் தொடங்கியது.

சதமடித்த வில்லியம்சன், சிக்ஸர் அடிக்க முயலும்போது ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து 118 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரோஞ்சி, டெவிசிச், செளதி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் என்கிற மோசமான நிலைக்குச் சென்றது நியூஸிலாந்து. கடைசி ஓவரில் ஹென்றியின் விக்கெட்டை வீழ்த்தினார் பூம்ரா. 

நியூஸிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் மிஸ்ரா, பூம்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com