இந்தியா-நியூஸிலாந்து 3-ஆவது ஒரு நாள் ஆட்டம்

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
மொஹாலியில் சனிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கேப்டன் தோனி.
மொஹாலியில் சனிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கேப்டன் தோனி.

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் 3-ஆவது ஆட்டத்தில் வென்று தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது இந்தியா. அதேநேரத்தில் இந்திய சுற்றுப் பயணத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள நியூஸிலாந்து அணி, அதைத் தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.
கடந்த ஆட்டத்தில் பெüலர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவது அவசியமாகும்.
மிடில் ஆர்டரில் விராட் கோலி, மணீஷ் பாண்ட, கேப்டன் தோனி, கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில்தான் கேப்டன் தோனி கடைசியாக சதமடித்தார். அதனால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மணீஷ் பாண்டே இந்தத் தொடரில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அவர் அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது முக்கியமாகும்.
இந்த ஆட்டத்திலும் ரெய்னா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கேதார் ஜாதவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆட்டத்தில் கேதார் ஜாதவ் 37 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோர் அடங்கிய கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல், கேதார் ஜாதவ் கூட்டணியை நம்பியுள்ளது இந்தியா. இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.
நியூஸிலாந்து அணியின் மிகப்பெரிய நம்பிக்கையே அதன் கேப்டன் கேன் வில்லியம்சன்தான். கடந்த ஆட்டத்தில் சதமடித்த அவர், இந்த ஆட்டத்திலும் பெரிய அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தொடக்க வீரர்களில் ஒருவரான டாம் லதாமும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பேட்டிங்கில் இவர்கள் இருவரை மட்டுமே நம்பியுள்ளது நியூஸிலாந்து.
மார்ட்டின் கப்டில், ராஸ் டெய்லர், கோரே ஆண்டர்சன், லுக் ரோஞ்சி போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவர்கள் யாரும் இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்காதது பின்னடைவாக கருதப்படுகிறது. ஆண்டன் டேவ்சிச்சுக்குப் பதிலாக ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. வேகப்பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், மட் ஹென்றி, டிம் செüதி கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் மிட்செல் சேன்ட்னரை நம்பியுள்ளது நியூஸிலாந்து.
இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா.
நியூஸிலாந்து (உத்தேச லெவன்): மார்ட்டின் கப்டில், டாம் லதாம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், கோரே ஆண்டர்சன், லுக் ரோஞ்சி (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம்/ஆண்டன் டேவ்சிச், மிட்செல் சேன்ட்னர், டிம் செüதி, டிரென்ட் போல்ட், மட் ஹென்றி.

மைதானம் எப்படி?


மொஹாலி மைதானம் இதற்கு முன்னர் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்துள்ளது. எனினும் ஆடுகளத்தில் சிறிதளவு புற்கள் வளர்ந்திருப்பதால் இப்போது எப்படியிருக்கும் என்பது தெரியவில்லை. இங்கு 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி 8 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் 3-இல் வெற்றி கண்டுள்ளது.
நியூஸிலாந்து அணி இந்த மைதானத்தில் முதல்முறையாக இந்தியாவுடன் மோதவுள்ளது. அதேநேரத்தில் இங்கு உலகக் கோப்பை போன்ற பொதுவான போட்டிகள் மூன்றில் விளையாடியுள்ளது நியூஸிலாந்து. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இரு வெற்றிகளைப் பெற்றுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுள்ளது.


9 ஆயிரம் ரன்களை நோக்கி தோனி...

இந்திய கேப்டன் தோனி இந்த ஆட்டத்தில் 22 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் சர்வதேச அளவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 9 ஆயிரம் ரன்கள் குவித்த 3-ஆவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெறுவார். இலங்கையின் குமார் சங்ககாரா, ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் மற்ற இருவர்.
அதேநேரத்தில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய 5-ஆவது இந்தியர் என்ற பெருமையை தோனி பெறுவார். சச்சின் டெண்டுல்கர், செüரவ் கங்குலி, ராகுல் திராவிட், முகமது அசாருதீன் ஆகியோர் மற்ற 4 இந்தியர்கள். இதுவரை 280 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள தோனி 9 சதம், 60 அரை சதங்களுடன் 8978 ரன்கள் குவித்துள்ளார்.


இந்திய அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் வெல்லக்கூடிய திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆட்டத்தில் எங்களின் திறமைக்கேற்றவாறு நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் சரியான முறையில் ஆடியிருந்தால் கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை 3-ஆவது ஆட்டத்தில் மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்வோம்.

-அமித் மிஸ்ரா,
இந்திய சுழற்பந்து வீச்சாளர்.


ராஸ் டெய்லருக்கு இந்தத் தொடர் கடினமானதாக அமைந்துவிட்டது. எனினும் அவர் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் சறுக்கல் ஏற்படும். ஃபார்மை இழந்து தவித்து வரும் டெய்லர், மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் ரன் குவிக்க விரும்புகிறார். விரைவில் அவர் பெரிய அளவில் ரன் குவித்து ஃபார்முக்கு திரும்புவார்.


-டிம் செளதி,
நியூஸி. வேகப்பந்து வீச்சாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com