ஐஎஸ்எல்: கோவாவை வீழ்த்தியது கேரளம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 22-ஆவது லீக் ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி. அணியைத் தோற்கடித்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோதிய கோவா-கேரள அணிகள்.
திங்கள்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோதிய கோவா-கேரள அணிகள்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 22-ஆவது லீக் ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி. அணியைத் தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த கேரள அணி, 2-ஆவது பாதியில் இரு கோல்களை அடித்து வெற்றி கண்டது. இதன்மூலம் இந்த சீசனில் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள கேரள அணி, சொந்த மண்ணுக்கு வெளியே முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கோவாவின் ஃபட்ரோடா நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 24-ஆவது நிமிடத்தில் ரிச்சர்லிசன் கொடுத்த கிராஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சீஸர் தலையால் முட்டி கோலடிக்க, கோவா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழாத நிலையில், 2-ஆவது பாதி ஆட்டத்தில் கோல் வாங்காமல் இருப்பதற்காக லூசியோவை களமிறக்கி, பின்களத்தை பலப்படுத்தினார் கோவா பயிற்சியாளர் ஸிகோ.
ஆனால் அவரின் திட்டத்தை ஆட்டம் தொடங்கியதுமே தகர்த்தது கேரளம். 46-ஆவது நிமிடத்தில் முகமது ரபீக் கொடுத்த தாழ்வான கிராஸை பயன்படுத்தி முகமது ராபி கோலடித்தார். இதனால் ஸ்கோர் சமநிலையை எட்டியது.
இதன்பிறகு 80-ஆவது நிமிடத்தில் கேரளத்துக்கு கிடைத்த அருமையான கோல் வாய்ப்பை கோட்டைவிட்டார் மைக்கேல் சோப்ரா. பெனால்டி பாக்ஸில் நின்று கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதும், பந்தை நேரடியாக கோல் கீப்பரிடம் அடித்தார் சோப்ரா.
ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84-ஆவது நிமிடத்தில் ஜோசு கொடுத்த கிராஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பெல்ஃபோர்ட், கோவாவின் பின்கள வீரர்களை வீழ்த்திவிட்டு அற்புதமாக கோலடிக்க, கேரள அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. கேரள அணி 8 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், கோவா அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இன்றைய ஆட்டம்
கொல்கத்தா-மும்பை
இடம்: கொல்கத்தா
நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com