ராஞ்சி போட்டி: ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம்... 
ராஞ்சி போட்டி: ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் ராஞ்சியில் நாளை நடைபெறுகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. இந்த நிலையில் 4-வது ஆட்டத்தில் வென்று தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது நியூஸிலாந்து. அதேநேரத்தில் இந்தப் போட்டியில் வென்று, ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 2-வது வெற்றியைப் பெற்றது இந்தியா. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 154 ரன்களும், கேப்டன் தோனி 80 ரன்களும் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தனர். விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் கோலியுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் கேப்டன் தோனி. இந்த ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக தோனி முன்வரிசையில் (4-வது வீரராக) களமிறங்கி அதிரடியாக ரன் சேர்த்தார்.

3-வது ஒருநாள் போட்டி குறித்து நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் கூறும்போது: ஆரம்பம் முதல் கடைசி வரை கடுமையாகப் போராடினோம். அதேநேரத்தில் நாங்கள் மோசமாக பந்து வீசியதாகவும் நினைக்கவில்லை. கோலியும், தோனியும் மிக அற்புதமாக ஆடினர். இலக்கை துரத்தும் வல்லமை கொண்ட வீரர்களில் கோலியும் ஒருவர். அவரைப் போன்ற ஒரு வீரருக்கு எதிராக பந்துவீசும்போது நமக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. 40 முதல் 45 ஓவர்களுக்குள் நாங்கள் விக்கெட் வீழ்த்தியிருந்தால் ஆட்டத்தின் போக்கு எங்களுக்கு சாதகமாக மாறியிருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் மிகச்சிறப்பாக ஆடிய கோலி கடைசியில் எங்களிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டார். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக பந்துவீச முயற்சிப்போம். அப்போது வெற்றி எங்கள் வசமாகும் என நம்புகிறேன் என்றார்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடிய அதே இந்திய அணியே, கடைசி 2 ஒரு நாள் ஆட்டங்களிலும் விளையாடும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல் 3 ஆட்டங்களில் விளையாடிய அதே அணியை கடைசி இரு ஆட்டங்களிலும் களமிறக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. சுரேஷ் ரெய்னா இன்னும் முழு உடற்தகுதியை பெறாததால் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நியூஸிலாந்து அணியின் மிகப்பெரிய நம்பிக்கையே அதன் கேப்டன் கேன் வில்லியம்சன்தான். 2-வது ஒருநாள் போட்டியில் சதமடித்த அவர், இந்த ஆட்டத்திலும் பெரிய அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தொடக்க வீரர்களில் ஒருவரான டாம் லதாமும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பேட்டிங்கில் இவர்கள் இருவரை மட்டுமே நம்பியுள்ளது நியூஸிலாந்து. மார்ட்டின் கப்டில், ராஸ் டெய்லர், கோரே ஆண்டர்சன், லுக் ரோஞ்சி போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவர்கள் யாரும் இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்காதது பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த போட்டியில் டெய்லர், நீஷம், ஹென்றி ஆகியோர் ஓரளவு பங்களித்தாலும் வலுவான பேட்டிங் இன்றி தவிக்கிறது நியூஸிலாந்து அணி.  

கடைசி ஒருநாள் போட்டி, வரும் 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com