நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூஸிலாந்து

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா.
நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூஸிலாந்து

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா.
ராஞ்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில்-டாம் லதாம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.3 ஓவர்களில் 96 ரன்கள் சேர்த்து அதிரடி தொடக்கம் ஏற்படுத்தியது. லதாம் 40 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து வெளியேற, கேப்டன் கேன் வில்லியம்சன் களம்புகுந்தார்.
கப்டில் அரை சதம்: இதன்பிறகு தொடர்ந்து சிறப்பாக ஆடிய கப்டில் 56 பந்துகளில் அரை சதம் கண்டார். நியூஸிலாந்து அணி 138 ரன்களை எட்டியபோது கப்டில் ஆட்டமிழந்தார். அவர் 84 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து வில்லியம்சனுடன் இணைந்தார் ராஸ் டெய்லர். இந்த ஜோடி 46 ரன்கள் சேர்த்தது. வில்லியம்சன் 59 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த நீஷம் 6 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து வந்த வாட்லிங் 14 ரன்களில் வெளியேற, ராஸ் டெய்லர் 35 ரன்கள் (58 பந்துகளில்) சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது நியூஸிலாந்து. இந்தியத் தரப்பில் மிஸ்ரா 2 விக்கெட் எடுத்தார்.
இந்தியா தோல்வி: பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதையடுத்து அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்தார் விராட் கோலி. இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. 51 பந்துகளைச் சந்தித்த கோலி 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கேப்டன் தோனி களமிறங்க, ரஹானே 61 பந்துகளில் அரை சதம் கண்டார். ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரஹானே 70 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் தோனி 11 ரன்கள் எடுத்த நிலையில் நீஷம் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
பின்னர் வந்த மணீஷ் பாண்டே 12 ரன்களிலும், கேதார் ஜாதவ் ரன் ஏதுமின்றியும், ஹார்திக் பாண்டியா 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, 167 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.
இதையடுத்து அக்ஷர் படேலுடன் இணைந்தார் மிஸ்ரா. ஒருபுறம் மிஸ்ரா நிதானமாக ஆட, மறுமுனையில் அக்ஷர் படேல் சிக்ஸரை விளாசி, நியூஸிலாந்தை அச்சுறுத்தினார். ஆனால் மிஸ்ரா 14 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாக, இந்தியாவின் தோல்வி உறுதியானது. மிஸ்ராவைத் தொடர்ந்து அக்ஷர் படேல் 38 ரன்கள் (40 பந்துகளில்) சேர்த்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் போல்டு ஆனார். கடைசி விக்கெட்டுக்கு இணைந்த குல்கர்னி-உமேஷ் யாதவ் ஜோடி 34 ரன்கள் சேர்த்தபோதும், இந்தியாவை தோல்வியிலிருந்து மீட்க முடியவில்லை. உமேஷ் யாதவ் 7 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 48.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு சுருண்டது. குல்கர்னி 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். கப்டில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. வெற்றியைத் தீர்மானிக்கும் 5-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் வரும் 29-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com