தொடரை வெல்வது யார்? இந்தியா-நியூஸி. இன்று பலப்பரீட்சை

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
தொடரை வெல்வது யார்? இந்தியா-நியூஸி. இன்று பலப்பரீட்சை

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா இரு வெற்றிகளுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. கடைசி ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.
நியூஸிலாந்து அணி இதுவரை இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றதில்லை. அந்த குறையை இந்த முறை தீர்ப்பதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 18 மாதங்களில் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை தவிர்த்து வேறு எந்த ஒரு நாள் தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை. அதனால் இந்தத் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய கேப்டன் தோனி இருக்கிறார்.
இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருகிறார். கடந்த 4 ஆட்டங்களில் அவர் முறையே 14, 15, 13, 11 ரன்களே எடுத்துள்ளார். எனினும் கேப்டன் தோனி, அணியில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பமாட்டார் என்பதால் இளம் தொடக்க வீரரான மன்தீப் சிங்கிற்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது. அதேநேரத்தில் மற்றொரு தொடக்க வீரரான ரஹானே ஓரளவு சிறப்பாக ஆடி வருவது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.
மிடில் ஆர்டரில் விராட் கோலியைத் தவிர்த்து வேறு யாருடைய ஆட்டமும் மெச்சும்படியில்லை. கேப்டன் தோனி ஓர் ஆட்டத்தில் 80 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய ஆட்டங்களில் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. மணீஷ் பாண்டே இதுவரை சோபிக்கவில்லை.
கேதார் ஜாதவ், அக்ஷர் படேல், ஹார்திக் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றிருந்தாலும், அவர்களால் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் தவல் குல்கர்னிக்குப் பதிலாக ஜஸ்பிரித் பூம்ரா இடம்பெறுவார் என தெரிகிறது. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. சுழற்பந்து வீச்சில் கேதார் ஜாதவ், அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா கூட்டணி பலம் சேர்க்கிறது.
நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அந்த அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மற்றொரு தொடக்க வீரரான டாம் லதாம், கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். ராஸ் டெய்லரும் ஓரளவு சிறப்பாக ஆடி வருகிறார். பின்வரிசையில் ஜேம்ஸ் நீஷம் பலம் சேர்க்கிறார்.
வேகப்பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், டிம் செளதி, மட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம் கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவது என நியூஸிலாந்து முடிவு செய்தால் ஆண்டன் டேவ்சிச்சுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன் சேர்க்கப்படலாம்.
இதற்கு முன்னர் 1995, 2000-இல் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஆட்டத்தில் இந்திய அணியே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா (உத்தேச லெவன்) ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே,
விராட் கோலி,
எம்.எஸ்.தோனி
(கேப்டன்/விக்கெட் கீப்பர்),
மணீஷ் பாண்டே,
கேதார் ஜாதவ், ஹார்திக்
பாண்டியா, அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா.

நியூஸிலாந்து (உத்தேச லெவன்)
மார்ட்டின் கப்டில்,
டாம் லதாம்,
கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், பி.ஜே.வாட்லிங் (விக்கெட் கீப்பர்),
ஜேம்ஸ் நீஷம், ஆண்டன்
டேவ்சிச்/கோரே ஆண்டர்சன், மிட்செல் சேன்ட்னர்,
டிம் செளதி, டிரென்ட் போல்ட்,
மட் ஹென்றி.

மிரட்டும் மழை
வங்கக் கடலில் உருவான கியான்ட் புயல் விசாகப்பட்டினத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது
வலுவிழந்தபோதிலும், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. சனிக்கிழமையும்
இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால்
பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மைதானம் எப்படி?
விசாகப்பட்டினத்தில் இந்தியா 5 ஆட்டங்களில்
விளையாடியுள்ளது. அதில் 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது. 2014-இல் இங்கு நடைபெறவிருந்த
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலானஆட்டம்
ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் மழையால் கைவிடப்பட்டது.

போட்டி நேரம்: பிற்பகல் 1.30, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com