மக்கள் வெள்ளத்தில் மிதந்த மாரியப்பன்

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று திரும்பிய சேலம் வீரர் மாரியப்பனுக்கு அவருடைய சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனைச் சாவடி பகுதியில், மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் மாரியப்பனுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.
சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனைச் சாவடி பகுதியில், மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் மாரியப்பனுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று திரும்பிய சேலம் வீரர் மாரியப்பனுக்கு அவருடைய சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டி பகுதியைச் சேர்ந்த டி.மாரியப்பன், பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனையோடு தங்கம் வென்றார்.
இதனையடுத்து, அவருடைய சொந்த ஊரான பெரிய வடகம்பட்டி விழாக் கோலம் பூண்டது. பதக்கம் வென்ற மகிழ்ச்சியுடன், தங்க மகன் மாரியப்பன் சனிக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினார்.
சென்னையில் இருந்து, கார் மூலம் சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனைச் சாவடிப் பகுதிக்கு மாலை 3.50 மணிக்கு மாரியப்பன் வந்தார். அவர் காரில் இருந்து இறங்கியதும், அவருடைய நண்பர்கள் தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர்.
அவருடைய தாயார் சரோஜா, கட்டியணைத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து மாரியப்பனை வரவேற்றார்.
இதையடுத்து தொப்பூரில் இருந்து தீவட்டிப்பட்டிக்கு வந்த மாரியப்பனுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். அவருடைய வாகனம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றது.
மேள தாளம் முழங்க பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட மாரியப்பன், பின்னர் வாகனத்தின் மேல்பகுதியில் அமர்ந்தபடி, சொந்த ஊரான பெரிய வடகம்பட்டிக்கு புறப்பட்டுச் சென்றார்.
நடுப்பட்டி, காடையாம்பட்டி, சந்தைப்பேட்டை, விதைப்பண்ணை, டேனிஷ்பேட்டை என மாரியப்பன் சென்ற வழியெங்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆரத்தி எடுத்தும், பூக்களைத் தூவியும் வரவேற்றனர்.
மேலும், சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். மாரியப்பனுடன், வாகனத்தில் அவரது தாயார் சரோஜாவும் இருந்தார். தன்னுடைய ஏழ்மை நிலைமையைப் போக்கிய, மகனுக்கு ஊர்மக்கள் அளித்த வரவேற்பைக் கண்டு அவர் ஆனந்த கண்ணீர் விட்டார்.
மாலை 5.50 மணிக்கு சொந்த ஊரான பெரிய வடகம்பட்டிக்கு மாரியப்பன் வந்தார். பட்டாசுகள் வெடித்து கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.
பெரிய வடகம்பட்டி கிராம எல்லையில் இருந்து, மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாரியப்பனுக்கு அங்கு முதல் மரியாதை செய்யப்பட்டது. இதன்பிறகு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக அவரது வீட்டுக்கு மாலை 6.50 மணிக்கு அழைத்து சென்றனர்.

தங்கப் பதக்கம் தாய்க்கு சமர்ப்பணம்

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு சனிக்கிழமை தனது சொந்த ஊருக்குத் திரும்பிய மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியது:
மிகவும் ஏழ்மை நிலையில் தவித்து வந்த எனக்கு, தாயார் சரோஜா மிகுந்த ஊக்கத்தை அளித்தார்.
அவரின் ஆதரவு மிகப்பெரிய அடித்தளத்தை எனக்கு கொடுத்தது. அதனால், ஒலிம்பிக் போட்டியில் பெற்ற தங்கப் பதக்கத்தை எனது தாய்க்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.


சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற டி. மாரியப்பனின் சாதனையைப் பாராட்டி, அவரது உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல்தலை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் அஞ்சல் தலையை வெளியிட, முதல் பிரதியை மாரியப்பன் பெற்றுக்கொண்டார்.
மேலும், மாரியப்பனின் சாதனையைப் பாராட்டி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் அனுப்பிய 20 ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதேபோன்று, த.மா.கா. சார்பில் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை, சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கரு.வெ.சுசீந்திரகுமார், மாநில துணைத் தலைவர் கந்தசாமி, மாநகர் மாவட்டத் தலைவர் ரவிவர்மா ஆகியோர் மாரியப்பனிடம் வழங்கினார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மாரியப்பனுக்கு செல்லிடப்பேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.
சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆர்.பி.கோபிநாத் தலைமையிலான பா.ஜ.க.வினர், மாரியப்பனை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com