டெஸ்ட்: நியூஸிலாந்து அபார பந்துவீச்சு! இந்தியா 239/7

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 86 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள்...
டெஸ்ட்: நியூஸிலாந்து அபார பந்துவீச்சு! இந்தியா 239/7

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-வது டெஸ்ட் போட்டி இது.

முதல் டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, 2-வது போட்டியில் வென்று சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது. கடைசியாக 2012-ல் இதே கொல்கத்தா மைதானத்தில் இங்கிலாந்திடம் தோற்ற இந்திய அணி, அதன்பிறகு சொந்த மண்ணில் விளையாடிய 12 போட்டிகளில் ஒன்றில்கூட தோற்கவில்லை. 10 வெற்றிகளையும், 2 டிராவையும் பதிவு செய்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ராகுல், உமேஷ் யாதவ்வுக்குப் பதிலாக தவண், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள். உடல்நலக்குறைவால் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ராஸ் டெய்லர் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடக்க வீரர்களாக விஜய்யும் தவனும் களமிறங்கினார்கள். ராகுலுக்குப் பதிலாக களமிறங்கிய தவன், இந்தப் போட்டியில் தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் அவர் 1 ரன்னில் ஹென்றியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஃபார்மில் உள்ள முரளி விஜய்யின் விக்கெட்டையும் ஹென்றி வீழ்த்தினார். முரளி விஜய் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனத்துடன் ஆடினார்கள். இருந்தாலும் கோலியால் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. அவர் 9 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 46 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  

உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. புஜாரா 31, ரஹானே 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இதன்பின்னர், இருவரும் கவனமாக ஆடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். மிகவும் மெதுவாக ஆடுகிறார் என்று விமரிசிக்கப்பட்ட புஜாரா, இந்தப் போட்டியில் உண்மையிலேயே மெதுவாக ஆடி அணியைக் கரை சேர்க்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார். முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை எட்டுவது மிக முக்கியம் என்பதால் புஜாரா, தன் வழக்கமான பாணியில் ஆடினார். 145 பந்துகளில் அரை சதம் எட்டினார் புஜாரா. இது அவருடைய தொடர்ச்சியான மூன்றாவது அரை சதமாகும். 

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வந்தது. புஜாரா 189 பந்துகளில் 64 ரன்களும் ரஹானே 92 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தார்கள்.

அற்புதமான பந்துவீச்சால் நியூஸிலாந்து அணி, இந்தியாவைத் தடுப்பாட்டம் ஆடச் செய்தது. எப்போது வேண்டுமானாலும் விக்கெட்டுகளைப் பறிகொடுக்க நேரிடும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனத்துடன் ஆடினார்கள். இன்று ஆடிய இந்திய பேட்ஸ்மேன்களில் ரஹானே மட்டும் கொஞ்சம் வேகமாக ஆடினார் என்று சொல்லமுடியும். மற்ற பேட்ஸ்மேன்கள், அற்புதமான பந்துவீச்சினால் தடுப்பாட்ட உத்தியையே கையாண்டார்கள். இதனால் இந்திய அணியால் அதிகம் ரன்களைக் குவிக்கமுடியாமல் போனது.

மிகவும் பொறுமையுடன் ஆடிய புஜாரா, 210 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வாக்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிச்சயம் சதமெடுப்பார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திய புஜாரா ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இதனால் மீண்டும் நியூஸிலாந்து அணி ஆக்ரோஷத்துடன் பந்துவீச ஆரம்பித்தது. 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜீதன் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. இந்த டெஸ்டிலும் இந்திய அணி 200 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது.

ரஹானேவும் அஸ்வினும் முதல்நாள் கடைசிவரை ஆடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. ஆனால் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் படேலின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரஹானே. நம்பிக்கையுடன் ஆடிய அஸ்வினும் அடுத்தச் சில ஓவர்களில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சில ஓவர்களுக்கு முன்பே முடித்துக்கொள்ளப்பட்டது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 86 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. சாஹா 14 ரன்களுடனும் ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளார்கள். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி அட்டகாசமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com