நாளை முதல் தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் (ஐஎஸ்எல்) 3-ஆவது சீசன், நாளை தொடங்குகிறது.
நாளை முதல் தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் (ஐஎஸ்எல்) 3-ஆவது சீசன், நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டி அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி, 3-ஆவது ஐஎஸ்எல் போட்டி மொத்தம் 79 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் 61 லீக் ஆட்டங்களும், அதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களும் நடைபெற உள்ளன. அனைத்து ஆட்டங்களும் இரவு 7 மணிக்குத் தொடங்குகின்றன. இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறுகிறது. 

ஐ.எஸ்.எல். தொடக்க விழாவில், பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட், ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண் தவன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பிரமாண்டமாக நடைபெறும் தொடக்க விழாவில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் நடனமாட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி 30 நிமிடங்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் கேரள அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர், ஐஎஸ்எல் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான நீதா அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

முதல் அரையிறுதி ஆட்டங்கள் டிசம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளிலும், இரண்டாவது அரையிறுதி ஆட்டங்கள் 13 மற்றும் 14-ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. இறுதி ஆட்டம் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம், கோவாவில் உள்ள ஃபடோர்டாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னையின் எஃப்சி. 

சாம்பியன் கோப்பை வென்ற சென்னை அணிக்கு ரூ.8 கோடியும், 2-ஆவது இடம்பிடித்த கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. அதிக கோல் அடித்த வீரருக்கான தங்க ஷுவை சென்னை அணியின் மெண்டோஸாவுக்கும் (13 கோல்கள்), சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறையை சென்னையின் அபுலா எடலும் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com