ஐபிஎல்: தமிழ் வர்ணனைக்கு அதிக ரேட்டிங்!

கடந்த வருடம், தமிழ்நாட்டில் தமிழ் வர்ணைக்குத்தான் அதிக டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது.
ஐபிஎல்: தமிழ் வர்ணனைக்கு அதிக ரேட்டிங்!

ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் சோனி நிறுவனம் கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் தமிழ் வர்ணனைக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5 முதல் மே 21 வரை நடக்கவுள்ளது. சோனி சிக்ஸ், சோனி ஈஎஸ்பின், சோனி மேக்ஸ் ஆகிய சானல்களில் ஐபிஎல் போட்டிகளில் ஒளிபரப்பாகின்றன. சோனி சிக்ஸில் ஆங்கிலத்தில் வர்ணனை இருக்கும். தமிழ், தெலுங்கு, வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகளின் வர்ணனை சோனி ஈஎஸ்பின் சானல்களில் வரும். சோனி மேக்ஸ் சானலில் ஹிந்தி வர்ணனையுடன் போட்டிகள் ஒளிபரப்பப்படும். இந்த வருடம் கன்னட மொழியில் வர்ணனை இருக்காது என்று சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் 10-ஆவது ஆண்டு போட்டிகள் ஏப்ரல் 5-ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த சீசனில் 2-ஆவதாக வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இறுதி ஆட்டமும், ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 10-ஆவது ஐபிஎல் போட்டிகள் சுமார் 47 நாள்களாக பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. 

ஐபிஎல் போட்டியின் தமிழ் வர்ணனையாளர்களாக நானி சத்யநாராயணன், சடகோபன் ரமேஷ், விபி சந்திரசேகர், ஹேமங் பதானி ஆகியோர் பணியாற்றவுள்ளார்கள்.

ஐபிஎல் தமிழ் வர்ணனை குறித்து நானி ஒரு பேட்டியில் கூறியதாவது: கடந்த வருடம், தமிழ்நாட்டில் தமிழ் வர்ணைக்குத்தான் அதிக டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது. தமிழுக்கு 74 சதவிகிதமும் ஆங்கிலத்துக்கு 25 சதவிகிதமும் ஹிந்திக்கு 1 சதவிகிதமும் டிஆர்பி ரேட்டிங் தமிழகத்தில் கிடைத்துள்ளது. எனவே தமிழகத்தில் தமிழ் வர்ணனைக்கு அதிக வரவேற்பு உள்ளது என்று கூறியுள்ளார். நானி மூன்றாவது முறையாக ஐபிஎல் போட்டியில் தமிழில் வர்ணனை தரவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com