டென்னிஸ் வீராங்கனை செரீனா கர்ப்பம்! ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாத கர்ப்பக் காலத்தில் இருந்துள்ளார்...
டென்னிஸ் வீராங்கனை செரீனா கர்ப்பம்! ரசிகர்கள் ஆச்சர்யம்!

தான் கர்ப்பமாக இருப்பதாக 35 வயது டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்து டென்னிஸ் உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

ரெடிட் சமூகவலைத்தளத்தின் துணை நிறுவனரான அலெக்ஸிஸ் ஓஹானியனுடன் (33) நிச்சயதார்த்தம் ஆகியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் தகவல் தெரிவித்தார் செரீனா வில்லியம்ஸ். இந்நிலையில் தான் 5 மாதம் (20 வாரங்கள்) கர்ப்பமாக உள்ளதாக சமூகவலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவலை அவர் வெளியிட்டார். பிறகு செரீனா அப்புகைப்படத்தை நீக்கிவிட்டார். 

இதையடுத்து செரீனாவின் மக்கள் தொடர்பாளர் கெல்லி புஷ் நோவாக் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். ஆமா. செரீனா கர்ப்பமாக உள்ளார். ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிக்குப் பிறகு எந்த ஒரு டென்னிஸ் போட்டியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த வருடம் எந்தவொரு போட்டியிலும் விளையாடமாட்டார். 2018-ல் மீண்டும் விளையாட வருவார் என்று நோவாக் அறிவித்துள்ளார். 

செரீனா வெளியிட்ட இத்தகவல் டென்னிஸ் உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. காரணம், ஜனவரி மாத இறுதியில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்றார் செரீனா. எனில் அவர் அப்போட்டியின்போது 3 மாத கர்ப்பக் காலத்தில் இருந்துள்ளார். அந்த நிலையிலும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆகியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தனது மூத்த சகோதரியான வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்து சாம்பியன் ஆனார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 7-வது பட்டத்தைக் கைப்பற்றிய செரீனா, தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும்பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா. 

23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிய அவர், "ஓபன் எரா'வில் (1968-இல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது.

அலெக்ஸிஸ் ஓஹானியனுடன்..
அலெக்ஸிஸ் ஓஹானியனுடன்..

கடந்து வந்த பாதை: வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பணக்காரர்களின் விளையாட்டான டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக 1995-ல் செரீனா கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 14. அதன்பிறகு அபாரமாக ஆடிய செரீனா 1998-இல் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் 2-ஆவது சுற்றில் தனது மூத்த சகோதரியான வீனஸிடம் தோல்வி கண்ட செரீனா, 1999-இல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்த செரீனா, ஏறக்குறைய 6 ஆண்டுகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார். அவர் எப்போது விளையாடினாலும், பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள வீராங்கனையாகவே கருதப்பட்டுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றில் மார்ட்டினா ஹிங்கிஸ், லின்ட்சே தேவன்போர்ட், மரியா ஷரபோவா, ஜஸ்டின் ஹெனின், வீனஸ் வில்லியம்ஸ் போன்ற முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தியது செரீனாவின் ஆற்றல்மிகு ஆட்டத்திற்கு உதாரணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com