சிக்ஸர்கள் மட்டுமே அடித்து நொறுக்கும் நிதிஷ் ராணா! யார் இவர்?

ஜாம்பவான்கள் விளையாடுகிற ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதல் இடம்!
சிக்ஸர்கள் மட்டுமே அடித்து நொறுக்கும் நிதிஷ் ராணா! யார் இவர்?

புதிய நட்சத்திரங்களை வாரி வழங்குவதில் ஐபிஎல்-லுக்கு நிகர் வேறு எந்தப் போட்டியுமில்லை.

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு உடனே தோன்றிய கேள்வி - மருந்துக்குக்கூட பவுண்டரிகள் அடிக்காமல் சிக்ஸர்கள் மட்டும் அடித்து நொறுக்கும் இந்த இளம் மும்பை அணி வீரர் யார்? 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஆம்லா, 58 பந்துகளில் சதத்தை எட்டினார். டி20 போட்டியில் அவர் எடுத்த முதல் சதம் இது. பின்னர் பேட் செய்த மும்பை அணி  15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. ராணா 34 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 62, பாண்டியா 4 பந்துகளில் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

7 சிக்ஸர்கள் அடித்த ராணா ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் அரை சதம் எடுத்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டியில் இது ஒரு சாதனை. 

இந்த வருட ஐபிஎல்-லில் இதுவரை ராணா எடுத்த ரன்கள்: 34, 50, 45, 11, 53, 62*. அதாவது 6 ஆட்டங்களில் 255 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். கெய்ல், மெக்கல்லம் போன்ற ஜாம்பவான்கள் விளையாடுகிற ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார் ராணா. 16 சிக்ஸர்கள். 

புணே அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்தார். இதில் மும்பை அணி தோற்றது. கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ராணாவின் அரை சதத்தால் வெற்றி கண்டது மும்பை. இதில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹைதராபாத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 45 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு மீண்டும் உதவினார். பெங்களூருவுடன் வெறும் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றமடைந்தார். ஆனால் அடுத்தடுத்த ஆட்டங்களில் அவருடைய வேட்டை தொடர்ந்தது. குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 36 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார். நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 198 ரன்கள் குவித்தும் ராணாவின் அதிரடியால் மும்பை அணி வென்றது.   

கடந்த ரஞ்சி போட்டியில் தில்லி சார்பாக விளையாடிய ராணா அதில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. அதன்பிறகு உள்ளூர் போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. தில்லி அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக அவரே எதிர்பார்க்காத அளவுக்குச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்தத் திறமையைத் தொடர்ந்து பயன்படுத்தி ராணா இந்திய அணிக்குத் தேர்வாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நம்பிக்கை வைக்கலாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com